Last Updated : 16 Aug, 2017 12:07 PM

 

Published : 16 Aug 2017 12:07 PM
Last Updated : 16 Aug 2017 12:07 PM

மரக்கன்றுகள் சூழ்ந்த கிராமம்: பொட்டல் காட்டை வனமாக மாற்றிய மக்கள்

திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் பொட்டல் காடாக இருந்த இடம், இன்று மரக்கன்றுகள் வளர்ந்து வனப்பகுதி போல காட்சியளிக்கிறது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சாத்தமங்கலம் கிராமம். இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் உள்ள கருப்புசாமி கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வரை பொட்டல் காடாக கிடந்தது.

தற்போது இந்தப் பகுதி முழுவதும் மரக்கன்றுகள் வளர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், இந்த இடம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, அதன் மையத்தில் குட்டை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த 11 ஏக்கர் நிலம் முழுவதும் புளியங்கன்று, புங்கன், வேம்பு, நாவல், தூங்குவாகை, நீர்மருது, தேக்கு உள்ளிட்ட 15 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு செழித்து வளர்ந்துள்ளன.

இதுமட்டுமில்லாமல், கிராமத்தில் உள்ள ஏரியின் கரைகள், விஏஓ அலுவலக வளாகம், பள்ளி வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் என இந்த கிராமம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஸ்ரீதேவி முதன்முதலாக மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த இந்த பணி, மாவட்ட ஆட்சியர் வரை வந்து பார்த்து பாராட்டும் அளவுக்கு கிராம மக்கள் மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

இப்பணியை முன்னெடுத்து மேற்கொண்டது, அதே ஊரைச்சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஆர்.ரமேஷ் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து ரமேஷ் கூறியது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஊரில் அரசு மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை தேர்வு செய்து கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுதல், எரு போடுதல், களை எடுத்தல், காய்ந்த மரக்கன்றுகளுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் என பணிகள் நடந்து வருகிறது. கிராம மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த மரக்கன்றுகள் உயிர் பிழைத்திருக்காது.

கிராமம் முழுவதும் 3,250 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மரக்கன்றுகளும் செழிப்புடன் உள்ளன. நாளடைவில் அனைத்து கன்றுகளும் மரங்களாக மாறிய பின்பு இந்த சாத்தமங்கலம் கிராமம் ஒரு வனம் போல் காட்சியளிக்கும். இதனால், தூய்மையான காற்று, சுகாதாரத்தை இந்தக் கிராமம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x