Last Updated : 15 Aug, 2017 12:40 PM

 

Published : 15 Aug 2017 12:40 PM
Last Updated : 15 Aug 2017 12:40 PM

மதுரை - சென்னை முதல் பகல் நேர ரயில்: வைகை ரயிலுக்கு ‘வயது 40’

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம். மதுரையின் அடையாளம் அந்நகரின் மையமாக பல நூறு ஆண்டுகளாக ஓடும் வைகை நதி. வைகை நதிக் கரையை ஒட்டியே மதுரை நகரம் உருவானதாகவும் சொல்லப்படுவதுண்டு.

அந்த பெயரை சுமந்தபடி கடந்த 40 ஆண்டுகளாக நிற்காமல், மதுரைக்கும்- சென்னைக்கும் இடையே பகல்நேர ரயிலாக இயங்கி கொண்டிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ்.

முன்பெல்லாம் மதுரை- சென்னை இடையே 12 மணி முதல் 15 மணி நேரம் அலுப்பூட்டும் பயணமாக இருந்ததை மாற்றிக் காட்டியது வைகை எக்ஸ்பிரஸ். தென்மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் தொடர் முயற்சியால் 1977-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

போக்குவரத்து வளர்ச்சி பெறாத, அக்கால கட்டத்திலேயே மீட்டர்கேஜ் தண்டவாளத்தில் 100 கி.மீ. வேகத்தில் அதிவிரைவாக சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 8 மணி நேரத்தில் அதுவும் ஒரே நாளில் சென்னை சென்று திரும்பும் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது.

40 ஆண்டுகளை கடந்து 41 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வைகை எக்ஸ்பிரஸ் மதுரை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. சென்னை சென்று உடனே திரும்ப வேண்டும் என்றால் மதுரை மக்கள் நாடுவது வைகையைத்தான்.

வைகை ரயில் சேவை தொடங்கியபோது, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற முதன்மை டிக்கெட் பரிசோதகர் எஸ். ஹென்றி கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கு முன், சென்னை செல்லவேண்டும் எனில் 12 மணி நேரத்துக்கு மேல் ஆகும். இக்குறையை போக்க, வர்த்தக சங்கங்கள், வியாபாரிகளின் கோரிக்கையால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. மீட்டர்கேஜ் பாதையில், முதலில் டீசலில் இயக்கப்பட்டது. ரூ. 80-க்கும் குறைவான கட்டணத்தில் சாதாரண மக்கள் சென்னை சென்றனர். காலை 6 மணிக்கு கிளம்பி, சென்னைக்கு பகல் 2.30 மணிக்கு சென்றடையும். மீண்டும் 3.15 மணிக்கு கிளம்பி இரவு 10.45 மணிக்கும் மதுரை வந்து சேரும். வைகை எக்ஸ்பிரஸ் என்றாலே ஒரு தனித்த அடையாளம் ‘image’ இருந்தது. இதில் பயணம் செய்வதை மக்கள் பெருமையாக கருதினர். இந்த ரயிலிலுள்ள கேன்டீனை ரயில்வே நிர்வாகமே நடத்தியது. தரமான உணவு பொருட்கள் சுடச்சுட தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளாக விபத்து இன்றி இயக்கப்படும் பெருமை வைகை ரயிலுக்கு உண்டு எனலாம். இதில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

மருதநாயகம் (ஓய்வுபெற்ற ஆர்பிஎப் அதிகாரி): 1977-ல் துரிதமான பயணத்திற்கென மதுரையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரயில் விட முடிவெடுத்தபோது, என்ன பெயர் வைப்பது என அதிகாரிகள் குழு யோசித்தனர். மதுரையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மதுரை என்றால் வைகை நதி. அதன் பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றார்.

இதன் பின்னணியில் வைகை எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டியதாக அறிந்தேன். இது மதுரைக்கு கிடைத்தது பெருமையாக அன்று பேசப்பட்டது. இந்த ரயிலில் திருச்சி, விழுப்புரம், சென்னை வரை பயணிகளின் பாதுகாப்புக்கு சென்றிருக்கிறேன். பிற ரயில்களைவிட, ஒரே நாளில் சென்னை சென்று திரும்ப முடியும் என்பதால், அன்றைக்கே பயணிகள் அதிகம் விரும்பும் ரயிலாக இருந்தது. இன்றும் இந்த ரயிலுக்கென தனி மவுசு உள்ளது என்றார்.

இலங்கை - சென்னை இணைப்பு

அந்த காலத்தில் இலங்கை-ராமேசுவரம் பயணிகள் கப்பல் இரவு 10 மணிக்கு ராமேசுவரம் வரும். அங்கிருந்து இரவு 10 மணிக்கு மேல் மதுரைக்கு புறப்படும் ரயிலில் அதிகாலை 4 மணிக்கு வரும் இலங்கையைச் சேர்ந்த வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் சென்னை செல்வதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். இலங்கை- சென்னை பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இருந்ததாக டிக்கெட் பரிசோதகர் ஹென்றி மேலும் தெரிவித்தார்.

தொழிலாளி தொடங்கிவைத்தார்

ராம்குமார் (எஸ்ஆர்எம்யூ உதவி கோட்ட செயலர்) கூறியது: மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது, ரயில்வே அமைச்சரான மதுதண்டவதே தலைமையில் 1977-ல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் விழாவுக்கு வந்திருந்தபோதும், அன்றைக்கு மதுரை கோட்டத்தில் ஓய்வுபெறும் வயதில் இருந்த மூத்த ரயில்வே ஊழியர் கொடியசைத்து முதல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். மீட்டர் கேஜ் பாதையில் 75 கி.மீ. வேகத்தில் செயல்பட்டது. சில மாதங்களில் சாதாரண ரயில் சக்கரங்களை பல் சக்கரங்களாக மாற்றி அதன் வேகம் 100 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.

பகலில் ஒரே நாளில் மதுரையில் இருந்து சென்னை சென்று திரும்பும் ஒரே ரயிலாக இருந்த நிலையில், 1986-87-ல் வைகை சென்னை சென்றவுடன் அங்கிருந்து திருச்சி பல்லவன் ரயிலாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற பல்லவன் வைகையாக மாறி மதுரைக்கு வந்தது. இது தற்போதும் நடைமுறையில் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x