Published : 14 Aug 2017 09:52 AM
Last Updated : 14 Aug 2017 09:52 AM

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருக வேண்டும்: முதல்வர் கே.பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியில் உலகமெல்லாம் அறம் தழைத்து அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

காக்கும் கடவுள் என போற்றப்படும் ஸ்ரீ மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் மக்களுக்கு என் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித குல வாழ்க்கை நெறிமுறைகளை மேம்படுத்தி, பகவத்கீதை என்ற ஞானநூலை உலகுக்கு அருளிய ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான, கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களை அழகிய வண்ணக்கோலங்கள் மற்றும் மாவிலைத்தோரணங்களால் அலங்கரிப்பார்கள். கிருஷ்ணரே குழந்தையாக தங்கள் இல்லத்துக்கு வருவதாக எண்ணி, இல்லங்களில் குழந்தைகளின் பிஞ்சுப் பாதச்சுவடுகளை மாவினால் பதிப்பார்கள். கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பால், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து இறைவனை வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

‘எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தோன்றி தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்று அருளிய ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளில், உலகமெல்லாம் அறம் தழைத்து அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துச்செய்தியில், கூறியிருப்பதாவது:

இரணியனை அழிக்க நரசிம்மனாகவும், ராவணனை அழிக்க ராமனாகவும், கம்சனை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணனாகவும் திருமால் அவதாரம் எடுத்தது ஆன்மிக வரலாறு. ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது மகாபாரதம் கூறும் வீர வரலாறு. அந்த வரலாறுகளை உருவாக்கவும், அதர்மத்தை அழிக்கவும், ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதரித்த புனிதநாளை இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடுகின்றனர். அண்ணலை நினைத்தாலே இன்னல்கள் போய்விடும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிலைக்கவும், நாட்டில் தலைதூக்கும் அதர்மம் அழிந்து தர்மம் தழைக்கவும் புரட்சித் தலைவி அம்மாவின் பாதையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x