Published : 14 Aug 2017 09:10 AM
Last Updated : 14 Aug 2017 09:10 AM

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசரச் சட்டம்: மத்திய அரசிடம் மசோதா இன்று ஒப்படைப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசரச் சட்டம் இயற்றப்படுகிறது. இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசிடம் அளிப்பதற்காக சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15 சதவீதமும் உள்இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை 17-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஜூலை 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தினார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தினர். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பற்காக 2 முறை டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார்.

இதற்கிடையே, 85 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை தயாரித்து வெளியிடவும், கலந்தாய்வை வரும் 17-ம் தேதி தொடங்கவும் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்வில் விலக்கு கோருவது தொடர்பாக தமிழக முதல்வரும் அமைச்சர்களும் பலமுறை பிரதமரை சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் உள்ள நிலை குறித்து நானும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் பேசினோம். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இந்த ஒரு வருடம் மட்டும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினோம். மாநில அரசு சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு உதவலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். மாநில அரசு தகுந்த முறையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி. நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கான மசோதா தயாரிக்கப்பட்டு நாளை (இன்று) காலை 10 மணிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்காக முதல்வரின் உத்தரவுப்படி சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.

அவசரச் சட்ட மசோதாவை மத்திய அரசு பரிசீலித்த பிறகு ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதனால் கலந்தாய்வு தொடங்குவது கொஞ்சம் தாமதம் ஆகும். எந்த சட்டச் சிக்கலும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக திடமான முடிவை தமிழக அரசு தெரிவிக்கும். மாணவர்களின் பாடத் திட்டங்கள் சரிசெய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் அவசரச் சட்ட மசோதாவுடன் நேற்றிரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x