Published : 13 Aug 2017 04:10 PM
Last Updated : 13 Aug 2017 04:10 PM

பூம்புகார் அழிந்த காரணம் கண்டறியப்படும்: அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் தகவல்

பூம்புகார் அழிந்ததற்கான காரணம் ஆராயப்படும் என அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் சோம.ராமசாமி தெரிவித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் நிதி உதவியுடன் பூம்புகார் ஆராய்ச்சி திட்டத்தை இறுதி செய்வதற்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் குருமல்லேஷ் பிரபு தலைமை வகித்தார்.

கருத்தரங்கம் தொடக்க விழாவில் அழகப்பா பல்கலைக் கழக தகுதிசார் பேராசிரியரும், ஆய்வுத் திட்டத்தின் தலைவருமான சோம.ராமசாமி பேசியதாவது:

பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை கணினிகள் மூலம் வடிவமைப்பதை மையக் கருத்தாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இவ்வாய்வு திட்டத்தில் தானியங்கி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதன் மூலம் கடல்கீழ் நில அளவீடு, கடல்கீழ் புகைப்படம் எடுத்தல், அவற்றில் இருந்து பூம்புகாரின் சிதையுண்ட பகுதிகளைக் கண்டறிதல், தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டுச் சான்றுகள், தொல்பொருள் சின்னங்களின் மூலம் பூம்புகார் பற்றிய பல தகவல்களை வெளிக்கொணருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

பூம்புகாரின் பல பரிணாமங்களோடு கடந்த கால நில அசைவுகள், காவிரி ஆறு திசைமாறிய நிலை, மேலும் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இப்பகுதியில் நிகழ்ந்த வெள்ளம், கடல்மட்ட உயர்வு, சுனாமி, சூறாவளி மற்றும் கடலோர அரிப்பு மற்றும் மண் செரிமானம் ஆகிய எந்த காரணங்களினால் பூம்புகார் அழிந்திருக்கக்கூடும் என்ற உண்மைகள் ஆராயப்படும் என்றார்.

கருத்தரங்கில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் கே.ஆர்.முரளிமோகன் பேசுகையில், பூம்புகார் போன்று இந்தியாவில் உள்ள பாரம்பரிய சின்னங்களை ஆராய்ந்து அவற்றை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்வதோடு அவற்றை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

கருத்தரங்கில் பல பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்களின் நிபுணர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பூம்புகாரைப் பற்றிய ஆய்வுத் திட்டங்களை சமர்ப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x