Published : 13 Aug 2017 03:16 PM
Last Updated : 13 Aug 2017 03:16 PM

சுற்றுலா தலமாகும் மதுரை வண்டியூர் கண்மாய்: குழந்தைகளை ஈர்க்க படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு

மதுரை மக்கள் பொழுது போக்கக்கூடிய இடமாகவும், குழந்தைகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலா மையமாகவும் மாற்ற ரூ.10 கோடியில் படகு போக்குவரத்துடன் கூடிய பல்வேறு பொழுது போக்கு சுற்றுலா வசதிகள் அமைந்த உள்ளூர் சுற்றுலா தலமாக வண்டியூர் கண்மாய் மாற்றப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தின் கோயில் மாநகரம், பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரையில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் மீனாட்சியம்மன் கோயிலையும், திருமலைநாயக்கர் மகாலையும் விட்டால் வேறு பொழுதுபோக்கக்கூடிய இடம் எதுவும் இல்லை. சினிமா திரையரங்குகளும், மால்களும் மட்டுமே வார விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கக்கூடிய இடங்களாக இருக்கின்றன. அதனால், தற்போது மாவட்ட நிர்வாகம் வண்டியூர் கண்மாயை சிறந்த சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் உருவாக்க சுற்றுலாத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்அடிப்படையில் சுற்றுலாத்துறை வண்டியூர் கண்மாயை மதுரையின் மிகப்பெரிய உள்ளூர் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மாநகராட்சி பகுதியில் வண்டியூர், மாடக்குளம், விளாங்குடி, கரிசல்குளம், தத்தநேரி, செல்லூர், வில்லாபுரம், அவனியாபுரம், சொக்கிகுளம், பீபிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் கடந்த காலத்தில் இருந்துள்ளன. இந்த கண்மாய்களும், குளங்களும்தான் விவசாயத்துக்கும், குடிநீ ருக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து மதுரையை வளப்படுத்திவந்தன. தற்போது இதில் வில்லாபுரம் கண்மாய், சொக்கிகுளம், பீபிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பல கண்மாய், குளங்கள் நகர் விரிவாக்கத்துக்கு இரையாகி குடியிருப்பு பகுதிகளின் பெயர்களாக மாறிவிட்டன. மீதமுள்ள வண்டியூர் கண்மாயும், மாடக்குளம் கண்மாயும் ஆக்கிரமிப்புகளாகவும், பராமரிப்பு இல்லாமலும் மற்றவைபோல் காணாமல் போய்விடக்கூடாது.

இதில் வண்டியூர் கண்மாய் சுமார் 687 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய்க்கு பருவகாலங்களில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் ஏராளமாக வந்து செல்கின்றன. வண்டியூர் கண்மாயில் கடந்த காலத்தில் பூங்கா, நடை பயிற்சி பாதைகள் அமைத்து ஓரளவு பராமரிக்கப்பட்டன. அதனால் தினமும், காலையும், மாலையும் இந்த வண்டியூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் திரண்டனர்.

ஆனால், பூங்காவும், நடைப்பயிற்சி பாதையும், உடற்பயற்சி சாதனங்களும் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகின்றன. அதனால், பொதுமக்கள், குழந்தைகள் வருகை குறையத் தொடங்கியுள்ளது.

அதனால், நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்த கண்மாயைக் காப்பாற்றவும், பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுதுபோக்கும் இடமாக மாற்றவும் இந்த கண்மாயை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

யோகா மையம், சைக்கிளிங் பாதை சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், இந்த கண்மாயை மதுரை மாநகரின் சிறந்த உள்ளூர் சுற்றுலாத் தலமாக்க கேட்டுக் கொண்டுள்ளது.

அவர்கள் பரிந்துரையை ஏற்று ரூ.10 கோடியில் பொதுமக்களையும், குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் சுற்றுலா திட்டம் தயாரிக்கப்படுகிறது. கண்மாயில் நான்கு நுழைவு வாயில்கள் அமைத்து ஒவ்வொரு நுழைவு வாயில் பகுதியிலும் குழந்தைகள் பூங்கா, உடற்பயிற்சி மையம், யோகா மையம், சைக்கிளிங் பாதை, வாக்கிங் நடைபாதை அமைக்கப்படுகிறது.

சுற்றுலாத் துறை நிதி ஒதுக்கீடு

முழுக்க முழுக்க இந்த திட்டம் சுற்றுலாத் துறை நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆண்டு முழுவதும் குழந்தைகளை மகிழ்விக்க படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யும் வகையில் கண்மாயில் தண்ணீர் நிலையாக இருக்கும் பகுதியை தேர்வு செய்து அப்பகுதியில் படகு குழாம் அமைக்கப்படுகிறது.

அதற்காக அப்பகுதியில் கண்மாயை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்த திட்டத்தை தயாரித்து ஆட்சியர் பார்வைக்கு அனுப்பப்படும். அவர்கள் ஒப்புதல் வழங்கியவுடன் சுற்றுலாத் துறைக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடுக்கு ஏற்பாடு செய்யப்படும். திட்ட ஒப்புதல், நிதி ஒதுக்கீடு நடந்தாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மற்றொருபுறம் கண்மாயை சர்வே செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x