Published : 11 Aug 2017 02:58 PM
Last Updated : 11 Aug 2017 02:58 PM

கட்சியின் நன்மைக்காக எதையும் துணிச்சலாக செய்வேன்: டிடிவி தினகரன்

கட்சியின் நன்மைக்காக எந்த நடவடிக்கையையும் துணிச்சலாக மேற்கொள்வேன் என்று டிடிவி தினகரன் உறுதிபடக் கூறியுள்ளார்.

அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளராகச் செயல்பட தனக்குத் தடையில்லை என்றார்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூரில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ''அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி சொன்னது சரிதான். அதிமுக என்பது தலைசிறந்த இயக்கம். நூற்றாண்டுகள் ஆனாலும் சிறப்பாக இயக்கமாக அதிமுக இருக்கும் என்று அன்றே ஜெயலலிதா சொன்னார்.

இயக்கம் குறித்து பொறுப்பற்ற முறையில் யாரோ பேசுவதற்கெல்லாம் நான் பதிலளிக்க முடியாது. ஆனால் தேவை ஏற்படும்போது, துணை பொதுச் செயலாளராக மிகவும் சரியான, தீர்க்கமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வேன்.

துணை குடியரசுத் தலைவர் விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு பதிலாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் கலந்துகொண்டனர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

'எதையும் துணிச்சலுடன் செய்வேன்'

என்னுடைய 23 வயதில் இருந்து இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். இந்த இயக்கமே என் உயிர் மூச்சு. இயக்கத்தின் நன்மை கருதி, எந்த நடவடிக்கையையும் துணிச்சலுடன் மேற்கொள்வேன். ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் தைரியமாக எதிர்கொள்வோம்.

சில நண்பர்கள் சுயநலம் மற்றும் பயத்தின் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்று பேசுகின்றனர். திவாகரனை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி சசிகலா முடிவு செய்வார்.

காவல்துறை அனுமதி மறுத்தாலும், அளித்தாலும் மதுரை, மேலூரில் பொதுக் கூட்டம் நிச்சயம் நடைபெறும். எதிரிகளின் செயலால் சில காலம் கட்சியில் இருந்து விலகி இருந்தேன்.

'அணிகள் இணைப்பு நடக்குமா?'

டெல்லியில் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் நீங்கள்தான் கூறுகிறீர்கள். அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நான் கட்சியில்தான் இருக்கிறேனே தவிர, ஆட்சியில் அல்ல. 2021 தேர்தலிலும் நாங்களே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பயத்தின் காரணமாகவே எனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று நிறைய அமைச்சர்கள் என்னிடம் கூறினர். யாரோ அவர்களின் பின்னால் துப்பாக்கி, கத்தியை வைத்து மிரட்டுகின்றனர். ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு உங்களிடம் பேசுகிறேன்.

'கட்சியும் ஆட்சியும் யாரிடம்?'

கட்சியும் ஆட்சியும் அதிமுகவிடம் இருக்கிறதே தவிர ஒரு நபர் அல்லது அணியிடம் இல்லை. நீட் தேர்வு விலக்குக்காக விஜயபாஸ்கர் 100 சதவீத முயற்சி எடுத்து வருகிறார்'' என்று பேசினார் தினகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x