Published : 05 Aug 2017 03:57 PM
Last Updated : 05 Aug 2017 03:57 PM

ஆங்கிலேயர் உருவாக்கிய அதிநவீன நகரம்

புதிதாக அமையும் ‘லேஅவுட்’களில் சாலைகள் இத்தனை அடி அகலம் இருக்க வேண்டும், பூங்காவுக்கும் பொதுப்பயன்பாட்டுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இன்றைக்கு நாம் சட்டதிட்டம் போடுகிறோம். ஆனால், 90 ஆண்டுகளுக்கு முன்பே, இதையெல்லாம் ஆங்கிலேயர்கள் செவ்வனே கடைபிடித்திருக் கிறார்கள். இதற்கான நிகழ் அடையாளமாக நிற்கிறது திருச்சி பொன்மலை ரயில்வே பணியாளர் குடியிருப்பு!

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அங்கு பணிபுரிந்த பணியாளர்களுக்காக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய குட்டி நகரத்தையும் ஆங்கிலே யர்கள் உருவாக்கினார்கள் என்பது பலர் அறியாத விஷயம்.

4 ஆயிரம் வீடுகள்

நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவந்த ரயில்வே பணிமனையானது 1926-ல் திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டது. அப்போதுதான் இங்கு 11 லட்சத்து 12 ஆயிரத்து 460 சதுர அடியில், ரயில்வே பணியாளர் குடியிருப்பும் உருவானது. சுமார் 4 ஆயிரம் வீடுக ளுடன் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில், பணியாளர்களின் பதவிக்கேற்ப வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான 8 வகையான வீடுகள் இங்கு கட்டப்பட்டன. 8 வகை குடியிருப்புக்கும் தனித்தனியாக பூங்கா, சிறிய விளையாட்டு திடல், தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் பாதாளச் சாக்கடை, குடிநீர் குழாய் வசதிகளுடன் பூமிக்கடியில் செல்லும் கேபிள் மூலம் மின்சாரமும் வழங்கப்பட்டது.

இப்போது, இங்கே பலகட்டிடங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துவிட்டன. பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு, பூங்காக்களும் புதர்மண்டிக் கிடக்கின்றன. தற்சமயம் இங்கு 750 வீடுகள் மட்டுமே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளன. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டு நவீனமாக இந்தக் குடியிருப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது குறித்துப் பேசினார் பொன்மலை ரயில்வே குடியிருப்புக் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.சி.நீலமேகம்.

கோடையிலும் குளுமை

“கருங்கல் மற்றும் செங்கற்களைக் கொண்டு கட்டுமானங்கள் நடந்திருக்கின்றன. வெப்பம் தாக்கக்கூடாது என்பதற்காக, மேல் பகுதியில் சீமை ஓடுகளும் உள் பகுதியில் தட்டை ஓடுகளும் வைத்து மேல்கூரைகளை அமைத்திருக்கிறார்கள். தளத்துக்கு கருப்பு நிற கடப்பா கல் பதித்திருக்கிறார்கள். குடியி ருப்புப் பகுதியைச் சுற்றிலும் மரங்கள் நடப்பட்டதால் கோடையிலும் வீடுகள் குளுமை தந்தன.

புதை சாக்கடை மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரை முறையாகச் சுத்திகரித்து விவசாயத்துக்குத் தந்திருக்கிறார்கள். இந்த நீரில் கோரைப்புல் வளர்த்தும் விற்கப்பட்டதாகவும் தகவல் இருக்கிறது. புதை சாக்கடைகளிலிருந்து வெளியேறும் பயோ கேஸை வெளியேற்ற கூண்டு வடிவிலான அழகிய காற்றுப் போக்கிகளை ஆங்காங்கே நிறுவியிருந் தார்கள். ஆனால், அந்த சுத்திகரிப்பு நிலையம் இப்போது பயன்பாட்டில் இல்லை.

நடன, நாடக அரங்கங்கள்

தொடக்கப் பள்ளிகள் தவிர, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிக்க இந்தக் குடியிருப்புக்குள் 2 மேல் நிலைப் பள்ளிகளையும் அமைத்தார்கள். பிள்ளைகள் விளையாட இரண்டு பெரிய மைதானங்களும் உண்டு. கலை நிகழ்ச்சிகளுக்காக, நடன அரங்கமும் நாடக அரங்கமும் செயற்கை நீருற்றுகளுடன் அமைக் கப்பட்டன. நாடக அரங்கம் பின்னர் திரையரங்கமாக மாறியது. இரண்டு அரங்கங்களுமே இப்போது செயல்படவில்லை. இவற்றின் ஒரு பகுதியில் படிப்பகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் மட்டும் இயங்கி வருகின்றன”என்கிறார் நீலமேகம்.

குடியிருப்புவாசிகளின் உள்ளூர் போக்குவரத்து வசதிக்காக இங்கே மாடு மற்றும் குதிரை வண்டி ஸ்டாண்டுகள் தனித்தனியாக இருந்தன. எந்த இடத்துக்குச் செல்ல எவ்வளவு காசு என்பதற்கான கட்டண அறிவிப்புப் பலகைகளும் ஸ்டாண்டுகளில் இருந்ததாகச் சொல்கிறார்கள். கட்டை வண்டிகளும் குதிரை வண்டிகளும் காலாவதியாகி இப்போது, எல்லாமே ஆட்டோ மயமாகிவிட்டன. இந்தக் குடியிருப்பின் மையத்தில், வாரச் சந்தைக்காகவும் இடம் ஒதுக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூடும் வாரச் சந்தையானது திருச்சி பிரசித்தமானது.

மலையைக் குடைந்து தொட்டி

“காவிரியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து கொண்டுவரப்படும் குடிநீரானது பொன்மலை மீது சேமிக்கப்பட்டு இங்குள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்காக பொன்மலையின் ஒரு பகுதியில் 22 அடி ஆழத்துக்கு மலையைக் குடைந்து 5 தொட்டிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 90 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தத் தொட்டிகளிலோ இங்கிருந்து தண்ணீரை கொண்டு செல்லும் இரும்புக் குழாய்களிலே ஒரு சிறு கசிவுகூட ஏற்பட்டதில்லை” என்று ஆச்சரியத்துடன் விவரிக்கிறார் நீலமேகம்.

அகன்ற சாலைகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சுத்தமான காற்று, சுகாதாரமான வாழ்க்கை என பொன்மலை ரயில்வே பணியாளர்களுக்கு அற்புதமான ஒரு நகரத்தை உருவாக்கித் தந்திருக் கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால், நமக்குத்தான் அதைப் போற்றிப் பாதுகாக்கக்கூட ஞானமில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x