Published : 04 Aug 2017 09:47 AM
Last Updated : 04 Aug 2017 09:47 AM

நினைவுகளைச் சுமந்து நிற்கும் கருணாநிதியின் ‘குருவிக்கூடு’

‘கோ

வை சிங்காநல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவி பத்மாவதியும் தங்கியிருந்தோம். அந்தக் குருவிக்கூட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது!' - தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’யில் விவரித்திருக்கும் அந்தக் ‘குருவிக்கூடு’ வீட்டின் சரித்திரம் சொல்லும் கதை இது!

கோவை, சிங்காநல்லூர் அரவான் கோயிலுக்கு முன்புறம் செல்லும் சிறிய சந்தில் இருக்கிறது அந்த ஒண்டிக் குடித்தன வீடு. சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் மாடி வீடுகளாக பரிணமித்திருக்க.. அந்த வீடு மட்டும் குட்டைச் சுவரும் கம்பிக் கதவுமாய் நிற்கிறது. உள்ளே சென்றால் கம்பிச் ஜன்னலுடன் சின்னதாய் இரண்டு அறைகள். முகப்பில் புதிதாய் தகடு கூரை போடப்பட்டிருக்கிறது. இங்கேயா கருணாநிதி வசித்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது அந்த வீட்டின் அமைப்பு.

அண்ணாசாமி வீடு

கருணாநிதி தனது கோவை வாழ்க்கை குறித்து எழுதும் போதும் பேசும்போதும் அண்ணாசாமியின் இந்த வீட்டைப்பற்றி நினைவுகூர மறந்ததில்லை. இப்பகுதியில் இயங்கிவந்த சரோஜா ஆலையில் எழுத்தராக இருந்தவர் அண்ணாசாமி. இன்றைக்குச் சுமார் 70 வருடங்களுக்கு முன்பு, கோவை - சேலம் ரயிலில் 'குடியரசு' நாளிதழைப் படித்தபடி பயணித்துக் கொண்டிருந்தார் அண்ணாசாமி. இதைப் பார்த்துவிட்டு எதிரே இருந்த சாமியார் ஒருவர், எரிச்சலில் அண்ணாசாமியை வசைபாடினார். அதே பெட்டியில் பயணித்த தி.க. தோழர்கள், பதிலுக்கு சாமியாரை ஒருபிடிபிடிக்க, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி ஓடியேவிட்டார் சாமியார்.

இது நடந்து சில நாட்கள் கழித்து அண்ணாசாமியைச் சந்தித்த நண்பர் ஒருவர், 'சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு கதை - வசனம் எழுத ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு உங்கள் வீட்டில் ஒரு போர்ஷனை வாடகைக்குத் தரமுடி யுமா?' என்று கேட்டார். அவரோடு வந்திருந்த வசனகர்த்தா ரயிலில் சாமியாரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய தி.க. தோழர்களில் ஒருவர் என்பதை அறிந்த அண்ணாசாமி, உடனே அவருக்கு தனது வீட்டின் ஒருபகுதியை வாடகைக்குக் கொடுக்க சம்மதித்தார். அன்றைக்கு அண்ணாசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியேறிய அந்த மனிதர்தான் பின்னாளில் தி.மு.க-வுக்கு தலைவரான மு.கருணாநிதி.

வீட்டை மறக்காத கருணாநிதி

இதன் பிறகு கருணாநிதியும் அண்ணாசாமியும் ஆருயிர் தோழர்கள் ஆனார்கள். இருவரது மனைவியரும் அணுக்கத் தோழிகள் ஆனார்கள். ராஜகுமாரி உள்ளிட்ட பல படங்களுக்கு கருணாநிதி கதை - வசனம் எழுதியதும், எம்.ஜி.ஆருடன் ஒன்றாக உண்டு உறங்கியதும் இதே வீட்டில்தான். சென்னைக்கு வந்து கட்சிக்குத் தலைவராகி, தமிழகத்துக்கு முதல்வரான பிறகும்கூட இந்த வீட்டை கருணாநிதி மறக்கவில்லை.

கடைசியாக, 1993-ல் அண்ணாசாமி இறந்தபோது துக்கம் விசாரிக்க வந்தது தான் அதன்பிறகு கருணாநிதி இங்கு வரவில்லை. அப்பா வாழ்ந்த வீட்டைப் பார்க்க ஒரே ஒருமுறை ஸ்டாலின் இங்கு வந்தார். கருணாநிதி வாழ்ந்த இந்த இல்லத்தை தி.மு.க. தரப்பில் விலைக்கு வாங்கி ஒரு அடையாளச் சின்னமாக பராமரிக்க வேண்டும் என அண்ணாசாமியின் வாரிசுகள் விரும்பினர். உள்ளூர் தி.மு.க-வினர் சிலர் வந்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை.. அண்ணாசாமியின் வாரிசுகள் நினைத்தது நடக்கவில்லை.

அப்பா மீது பிரியம்

தற்போது இந்த வீட்டில் அண்ணாசாமியின் இளைய மகன் ராஜமாணிக்கம் வசிக்கிறார். இந்த வீட்டுக்கும் கருணா நிதிக்கும் உள்ள பந்தம் குறித்துப் பேசிய அவர், “எனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். அண்ணனுக்கும் ஒரு அக்காவுக்கும் வேலைக்கு ஏற்பாடு செஞ்சதுகூட கருணாநிதிதான். எங்க அப்பாவும் நாடக நடிகர் என்பதால் கருணாநிதிக்கு அப்பா மீது கொள்ளைப் பிரியம். ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சுப்பார்க்கமுடியாது. அந்தளவுக்கு நெருக்கம்னு அப்பா சொல்வார்.

பெரிய அக்கா, கருணாநிதி தூக்கி வளர்த்த பிள்ளை. மாமா மாமான்னு அவருக்கிட்ட அவ்வளவு உரிமையா பேசுவாங்க. மில்லுல அப்பா பார்த்துட்டு இருந்த வேலை, வாரிசு அடிப்படையில் எனக்குக் கிடைச்சுது. கொஞ்ச நாள்ல அந்த மில்லை மூடிட்டதால அங்க, இங்க மோதிட்டு இப்ப வீட்டுல சும்மா இருக்கேன். என்னோட சம்சாரம், தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறதால எங்க வாழ்க்கை ஓடுது” என்றவர், வீட்டு விஷயம் பற்றிப் பேசினார்.

ஒரே சொத்து இதுதான்

“எங்களுக்குன்னு இருக்கிற ஒரே ஒரு பூர்வீகச் சொத்து இந்த வீடு மட்டும்தான். இதில் தனக்கான பாதிப் பங்கை சில வருடங்களுக்கு முன்பே அண்ணன் வித்துட்டார். இப்ப, என்னோட பங்குல நான் மட்டும் இருக்கேன். இந்த வீட்டை விற்க முயற்சியெடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்துருது. அது ஏன்னே புரியல” என்றார் ராஜமாணிக்கம்.

கருணாநிதி வசித்த அந்த ஒற்றை அறையைப் பார்த்தோம். பழமை மாறாமல் சாணம் மெழுகிய சிமென்ட் தரையுடன் அது இருந்தது. ”இதோ இங்கேதான் தரையில உட்கார்ந்து, மேஜை மேல தாள்களை அடுக்கி எந்நேரமும் எழுதிக்கிட்டே இருப்பாராம் கருணாநிதி” என்று விழிகள் விரியச் சொன்னார் ராஜமாணிக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x