Last Updated : 03 Aug, 2017 03:16 PM

 

Published : 03 Aug 2017 03:16 PM
Last Updated : 03 Aug 2017 03:16 PM

வெறும் சொற்களில் மட்டுமல்ல; உறுப்புதான நன்கொடையிலும் மிளிர்கிறது நட்பின் வலிமை

உறுப்புதான நன்கொடை அளிக்க நண்பர்களும் முன்வரலாம் என்பதை சென்னைவாசி ஒருவர் நிரூபித்துள்ளர்.

ஜூன் மாதம் ஒரு அழைப்புடன் தொடங்கியது. சென்னையில், நாய் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக உள்ளார் வித்யபிரசன்னா கோபிநாத். அவரது நண்பரின் மனைவிக்கு கல்லீரல் செயலிழந்துவிட்டது. நண்பரது மனைவியின் உறவினர்கள் தங்கள் உறுப்பை நன்கொடையாகக் கூட வழங்கமுடியாத நிலை.

எல்லோருடைய உறுப்புகளும் எல்லாருக்கும் பொருந்தாது என்பதுதான் மருத்துவத்துறையின் முக்கியமான விதி.

"என் மனதில் ஒரு சந்தேகமும் இல்லை. இது யாரோ ஒருவருடைய வாழ்க்கையின் விஷயம் மட்டுமல்ல என்பதை நான் அறிந்தேன், என்னால் ஏதாவது உதவி செய்யமுடியும் என்றால், நான் உடனே அதை செய்ய வேண்டும்.'' என்றார் அந்த 34 வயது இளைஞர்.

கோபிநாத்தின் ரத்த வகை பொருந்தியுள்ளதால் அவரது உறுப்புதான மாற்றம் ஏற்புடையதாக உள்ளதாக இருந்தது. ஏற்கெனவே கோபிநாத்தின் தாய், அவரது சகோதரிக்கு சிறுநீரகத்தை நன்கொடையாக அளித்திருந்தார். எனவே அவர்கள் குடுமபத்தைப் பொறுத்தவரை இது புதிது அல்ல.

ஜூலை 21 அன்று, கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டு கோபிநாத்தின் நண்பரின் மனைவிக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதுடெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் நடைபெற்றது.

மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் பித்தநீர்குழாய் அறிவியல் பிரிவு தலைவரான டாக்டர் சுபாஷ் குப்தா இதுபற்றி தெரிவிக்கையில், இப்படி உறுப்புமாற்று நடைபெறுவது என்பது முதல் முறையல்ல, என்றாலும், ஒரு உறுப்புதான நன்கொடையாளர் குடும்ப உறுப்பினராகவோ அல்லது உறவினராகவோ இல்லாமல் இருக்கலாம் என்பது நிச்சயமாக அதேநேரத்தில் அரிதாகவே இருந்தது.

தங்கள் உறவையும் அன்பையும் நிலைநாட்ட விரும்பி உறுப்புதானம் செய்ய பலர் முன்வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி செய்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும்கூட மாற்று சிகிச்சை சட்டத்தின் விதிமுறைகளோ கடினமாக இருக்கிறது.

நட்பின் நிரூபணம்

''இந்த நண்பர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஒரே வீட்டில் குடியிருப்பவர்களாக இருந்தார்கள். எப்பொழுதும் தொடர்பு கொள்ளும்வகையிலான பதிவுகளை நன்கு பராமரித்து வந்துள்ளனர். அவர்களது நட்பின் வலுவான பிணைப்பின் அடையாளமாக இந்த நன்கொடைக்கு உயர் மருத்துவ அதிகாரிகள் அனுமதி அளித்தனர்'' என்று விளக்கினார் டாக்டர் குப்தா.

கோபிநாத்தும் அவரது நண்பரும் இங்கிலாந்தில் மேல்படிப்பை ஒன்றாக படித்து முடித்தவர்கள். இவர்கள் படிப்பின்போது குழந்தைகள் காப்பகத்தில் நண்பரின் குழந்தை விடப்பட்டிருந்தாள். அப்போதுதான் அவர்களது நட்பு பலப்பட்டிருந்தது. இந்தியா திரும்பிய பின், ஆண்டுகள் கடந்த பிறகு அவர்களது குடும்பத்தினர் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்பில் இருந்தனர்.

ஒரு சமூக வலைதளப் பதிவு போதும்

சமூக வலைதளத்தில் தங்கள் நண்பரின் பதிவைக் கண்ட பிறகு கோபிநாத்தும் அவரது மனைவி இருவருமே தங்கள் கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர். ''என் மனைவி மருத்துவரீதியாக உறுப்புதானம் அளிக்க தகுதியில்லை என்பதை பின்னர்தான் கண்டுபிடித்தோம். அதனால் என் மனைவி விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்டார்.

அதன்பின்னர் நான் சென்னையில் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டேன். அதில் எனக்கு உறுப்புதானம் நன்கொடை அளிக்கும் தகுதி இருப்பதைக் கண்டேன். இது ஒரு கடினமான முடிவு அல்ல. இனி, சிகிச்சைக்கான பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்தேன்''  என்கிறார் கோபிநாத்.

உறுப்புதானம் செய்யும் தனது முடிவில் அவர் தெளிவாக இருக்கிறாரா என்பதை அறிவதற்காக, அறுவை சிகிச்சை நடைபெறும் இடமான டெல்லியில் இருந்து மருத்துவர்கள், பேச விரும்பினர். ''ஆனால் நான் முற்றிலும் உறுதியாக இருக்கிறேன்'' என்று தெளிவாக பதில் அளித்துள்ளார் கோபிநாத்.

ஒரே நாளில்

மாற்று அறுவை சிகிச்சைக்கான பணிகளும் தொடங்கப்பட்டன. அப்போது அந்த 44 வயதான நோயாளிக்கு நீண்ட கால நோயெதிர்ப்புநிலையிலேயே கல்லீரல் ரணமாகியிருப்பது கண்டறியப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கல்லீரல் உயிரணுக்களே கல்லீரலை தாக்கி அழிக்கக் கூடும்.

இந்நிலையில் நோயாளிக்கு வாதம் ஏற்படவும் தொடங்கிவிட்டது. இது மேலும் பல சிக்கல்களை கொண்டுவந்துவிடக்கூடிய முற்றிய ஆபத்தான நிலையாகும்.

"நாங்கள், ஜூலை 21 ம் தேதி காலையில் தொடங்கிய அறுவை சிகிச்சை மாலை முடித்துவிட்டோம்" என்றார் தெற்கு டெல்லி சாகெட்டில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் லிவர் மற்றும் பைலியாரி சயின்செஸ் பிரிவின் தலைவர் டாக்டர் சுபாஷ் குப்தா. அதன்பிறகு நோயாளிக்கு எத்தகைய இடையூறும் துன்பங்களும் ஏற்படவில்லை. அவரும் சிகிச்சை முடிந்து நலமாகிவிட்டார்.

இந்த சிகிச்சைக்காக டெல்லியில் இரு குழுக்களாக இயங்கி மாற்று அறுவை சிகிச்சைப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

உறுப்புதானம் யாரும் செய்யலாம்

மாற்று அறுவை சிகிச்சை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு கோபிநாத் தனது அனைத்து நிலைகளிலும் இயல்புநிலைக்கு வந்துவிட்டார்.

''உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தபிறகு நன்கொடையாளர்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயம்தான் மக்களிடம் உள்ள அச்சம். அத்தகையவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, குறுகிய காலத்திற்குள்ளாகவே உங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதுதான்.

என் கல்லீரலின் நீக்கப்பட்ட பாகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த சில ஆரம்பக் கட்டுப்பாடுகளும் தேவையாக உள்ளன, ஆனால் அதெல்லாம் மூன்று மாதங்கள் வரைதான். நீங்கள் மீண்டும் வழக்கமான வேலைகளை செய்யத் தொடங்கிவிடலாம்'' என்று மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்துகிறார் வெறும் சொற்களில் மட்டுமின்றி செயலிலும் நண்பருக்காக ஆதரவுக்கரம் நீட்டிய நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரரான கோபிநாத்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x