Last Updated : 31 Jul, 2017 01:35 PM

 

Published : 31 Jul 2017 01:35 PM
Last Updated : 31 Jul 2017 01:35 PM

மாணவர் சேர்க்கையின் போதே வங்கிக் கணக்கு தொடக்கம்: சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி

கிருஷ்ணகிரி அருகே தாசிரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போதே வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் கடந்த 1954-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் 142 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் கே.ஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டு, அவற்றில் தற்போது 70 மாணவர்கள் வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப்பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போதே வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கான சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது குறித்து பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் எஸ்.வி.திருவேங்கடம் கூறியதாவது:

கடந்த 2015-ம் ஆண்டு உலக சேமிப்பு நாள் அன்று ‘தி இந்து'-வில் வெளியான சிறுசேமிப்பு கட்டுரையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம், கல்லூரியைச் சுற்றியுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்துள்ளதை அறிந்தேன். அதன் தாக்கத்தால் இந்தப்பள்ளியிலும் மாணவர்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்கி, சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தில் மாணவர்கள் தங்களது பெயரில் கணக்கு துவங்கி, பெற்றோர் செலவுக்கு தரும் ரூ.1, ரூ.2 பணத்தை வகுப்பு ஆசிரியர்களிடம் வழங்குவார்கள். மாத இறுதியில் வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு தரும் பணத்தை வங்கியில் செலுத்தி வருகிறோம்.

8-ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் தங்களது சேமிப்புக் கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருந்தால், அவர்களது உயர்கல்விக்கு உதவும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 142 மாணவ, மாணவிகளின் சேமிப்பு கணக்கில் ரூ.80 ஆயிரம் உள்ளது.

இந்த கூட்டு முயற்சிக்கு ஊர்மக்களின் உதவியுடன் பள்ளியின் தலைமையாசிரியர் பாத்திமாமேரி, ஆசிரியர்கள் கென்னடிவாணன், ஜெயலஷ்மி, சுகுணா, சித்ரா, சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் ஸ்மீதா, சந்தியா, பார்த்திபன் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x