Published : 31 Jul 2017 09:18 AM
Last Updated : 31 Jul 2017 09:18 AM

தமிழகத்தில் முதல்முறையாக நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமானது ‘சிங்காநல்லூர் குளம்’: 700-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் வாழ்வாதார நீர்நிலை

 

பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரி யாக திகழும் கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நொய்யல் நீரா தாரத்தை நம்பி ஏராளமான குளங்கள் உள்ளன. அதில் நகரின் எல்லையில் இருப்பது சிங்காநல்லூர் குளம். நகருக்குள் இருந்தாலும் மாசுபாடுகள் குறைந்து, சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கிறது. அதனை மேலும் சிறப்பாக்க மாநகராட்சியும், தன்னார்வலர்கள் குழுக்களும் பல் வேறு முயற்சிகளை எடுத்து வருகின் றன.

மரப்பண்ணை

கரை ஓரத்தில் மியாவாக்கி மரப் பண்ணை அமைப்பது, பனை விதை கள் நடுவது, பல்லுயிர் சூழலைக் கணக்கிடுவது, குளக்கரையை பலப் படுத்த வெட்டிவேர் நடுவது என ஒவ் வொரு வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்குள்ள சூழலை பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த குளம் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கல்வெட்டைத் திறந்துவைத்து, குளத்தை நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார்.

200 மூலிகைச் செடிகள்

நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மைய நிர்வாகிகள் கூறும்போது, ’16-ம் நூற்றாண்டில் சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பட்ட இந்த குளம், நொய்யல் ஆற்றில் இருந்தும், நகரின் இதர நீர்வழித் தடங்களில் இருந்தும் நீரைப் பெறுகிறது. மற்ற எந்த குளங்களிலும் இல்லாத அளவுக்கு இயற்கைச்சூழல், பசுமையான பரப்பு, பல்லுயிர் செழுமை ஆகியவை இந்த நீர்நிலைக்கு நிறைந் துள்ளன. அதன் பிரதிபலிப்பாகவே இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில், தாவர, பறவை உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவை கள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. நகரில் எங்கும் இல்லாத வகையில் நன்னீர் ஆமை அதிகமாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இயற்கை சூழலியல் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும், ஆய்வுக்கு இடமளிக்கும் பகுதியாகவும் இந்த குளம் மாறியுள்ளது. இந்த சூழலை அங்கீகரித்து, மேம்படுத்த ‘நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்றனர்.

நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதோடு, முன்னாள் குடியரசுத் தலைவர் நினைவாக, குளக்கரையில் ‘கலாம் வனம்’ அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் படகு இல்லத்தை திறந்து சூழல் சுற்றுலாவை செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x