Last Updated : 25 Jul, 2017 09:54 AM

 

Published : 25 Jul 2017 09:54 AM
Last Updated : 25 Jul 2017 09:54 AM

2001-ம் ஆண்டு ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு: காலம் தாழ்த்தியதால் பலன் கிடைக்காமல் போனது - வழக்கை நடத்திய முன்னாள் திமுக எம்.பி. விஜயன் கருத்து; ஜெ. தொடுத்த அவதூறு வழக்குகள் என்னவாகும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு தேவையற்ற விதத்தில் காலம் தாழ்த்தப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டதன் பலன் கிடைக்காமல் போய்விட்டது என்று நாடாளுமன்ற முன்னாள் திமுக உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் (ஆண்டி பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவரது மரணத்தையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முதலில் தொடர்ந்த திமுக முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி மரணம் அடைந் ததையடுத்து, நாகப்பட்டினம் முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் வழக்கை நடத்தி வந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அவர் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத் தில் முதலில் வழக்கு தொடுக்கப் பட்டபோதே முறைப்படி விசா ரணை நடைபெற்றிருந்தால் இந்த வழக்கிலும் ஜெயலலிதா குற்றவாளி என்று முடிவாகியிருக்கும். ஆனால் மற்ற வழக்குகளைப் போலவே இதிலும் ஜெயலலிதா தரப்பில் தேவையற்ற காலதாமதம் செய் தனர். உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் சென்று, பின் னர் அங்கிருந்து திரும்ப உயர் நீதிமன்றம் வந்தது. அப்போது நான்கு மாதங்களில் வழக்கை முடிக்க அறிவுறுத்தியும் இத்தனை ஆண்டுகளாக வழக்கை இழுத் தடித்தார்கள். பின்னர் செ.குப்பு சாமி இறந்ததை வைத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததும், நான் உச்ச நீதிமன்றத் துக்கு வழக்கை கொண்டு சென் றேன். இப்படி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அங்கும் இங்குமாக அலைந்து வழக்கில் தேவையற்ற காலதாமதம் ஆகி விட்டது. அதனால் இந்த வழக்கில் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றார்.

அவதூறு வழக்குகள் ரத்தாகுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதற்காக சொத்து குவிப்பு வழக்கில் இருந்தும், ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்ட வழக்கில் இருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

ஆனால் ஜெயலலிதா முதல்வ ராக இருந்தபோது அவரது சார் பில் அரசியல் கட்சியினர் மற்றும் நாளிதழ்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் தற் போதைய நிலை சட்டரீதியாக என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்:

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் 163 அவதூறு வழக்குகள் கடந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டுள் ளன. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்குகளில் யாருடைய பெயருக்கு, புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளதோ அவர் உயிருடன் இருந்தால் அவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க நேரிடும். ஒருவேளை அந்த வழக்கு களில் சம்பந்தப்பட்டவரை விடு வித்து மற்றவர்களை சாட்சியாக சேர்த்து இருந்தால் அவர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண் டும். ஆனால், ஜெயலலிதா தற் போது உயிருடன் இல்லை என்பதால் இந்த அவதூறு வழக்குகளும் தானாகவே நீர்த்துப் போய்விடும். அதை சட்ட ரீதியாக முடித்து வைக்கக்கோரி எதிர்மனுதாரர்கள் முறையிடலாம்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்:

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சார்பில் முன்னாள் அரசு மாவட்ட பெருநகர தலைமை குற்ற வியல் வழக்கறிஞர்தான் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 199-ன்படி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குத் தொடர சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால் அந்த அவதூறு வழக்குகளை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து அதில் தடையும் பெறப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் அந்த வழக்குகள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும். ஆனால் எந்த அவதூறு வழக் கிலும் இதுவரை தண்டனை அளிக் கப்பட்டதாக தெரியவில்லை. இந்த அவதூறு வழக்குகள் அனைத்தும் அரசு வழக்கறிஞருக்கு ‘‘பவர் ஆப் அட்டர்னி’’ வழங்குவது போலத் தான். உரிமையாளர் உயிருடன் இல்லை என்றால் பவருக்கான அதிகாரமும் தானாகவே செல்லாத தாகி விடும். ஏற்கெனவே தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதி ராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நானே எதிர்த்து வாதாடி தடை உத்தரவும் பெற்றுக் கொடுத்துள்ளேன். எனவே இந்த அவதூறு வழக்குகளும் தானா கவே செயல் இழந்து விடும்.

ஆனால் இந்த அவதூறு வழக்குகளைத் தொடர்ந்த சென்னை மாவட்ட முன்னாள் அரசு பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கூறும் போது, ‘‘இந்த அவதூறு வழக்குகள் அனைத்தும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயருக் கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டதாகத்தான் தொடரப்பட்டுள் ளது. தற்போது ஜெயலலிதா உயி ருடன் இல்லை என்றாலும் அந்த வழக்குகள் சட்டரீதியாக செல்லத்தக்கவையே ஆகும்” என்றார்.

4 தொகுதிகளில் போட்டியிட்டது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சட்டப்படி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். அதனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா சார்பில் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நான்கும் நிராகரிக்கப்பட்டன. அதேசமயம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 33(7)(பி)-ன்படி வேட்பாளர் ஒருவர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும். இச்சட்டத்தை மீறியதால் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்எல்ஏ.வாக இல்லாத நிலையிலும் ஜெயலலிதா முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x