Published : 21 Jul 2017 08:18 AM
Last Updated : 21 Jul 2017 08:18 AM

அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றிய கமலின் துணிச்சலான விமர்சனம் பாராட்டுக்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு

அதிமுக அரசு மீதான கமல்ஹாச னின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.கமல்ஹாசனுக் கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் இருந்து வரு கின்றன. பிஹாரை விட தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கமல்ஹாசன் குற்றம்சாட்ட, அதிமுக அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிடத் தயாரா? என்று கமலுக்கு அவர்கள் சவால் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு களுக்கான ஆதாரங்களை இ-மெயில் மூலம் அமைச்சர் களுக்கு அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக் கும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்):

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசின் செயல்பாடு களை பற்றி நடிகர் கமல்ஹாசன் துணிச்சலுடன் வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது பாராட்டுக் குரியது. மாநில அரசே ஊழல் மயமாகிவிட்டது என்ற கமலின் விமர்சனத்துக்கு அதிமுக அமைச் சர்கள் மிரட்டும் தொனியில் பதி லளித்தனர். இதனால் அமைச்சர் களுக்கே ஊழல் பட்டியலை அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் கருத்தால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. ஆனால், மக்களிடம் ஊழல் குறித்து சிறிதளவேனும் விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.

ஏ.எம்.விக்ரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்):

ஜனநாயக நாட்டில் கமல் கூறிய கருத்துகளை தனி மனித சுதந்திரமாகவே பார்க்க வேண்டும். அரசின் தவறுகளை துணிச்சலுடன் விமர்சித்தது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவிக் கும் விமர்சனங்கள் கமலுக்கே சாதகமாக அமையும். கமலின் விமர்சனத்தை இந்த அளவுக்கு பெரிதாக்க வேண்டியதே இல்லை.

அருள்மொழி (வழக்கறிஞர்):

இன்றைய சூழலில், தமிழக அரசைப் பொருத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. எந்தவொரு கருத்துரிமை பற்றிய பிரச்சாரத்தையும் தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக பாஜக அரசு நினைப்பதைப் போலவே தமிழக அரசும் நினைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறினால் அதற்கு பதில் கூற வேண்டும். மாறாக, ஊழல் பற்றி பேசுவதே தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது.

கமல்ஹாசன் ஏன் ஜெயலலிதா இருந்தபோது பேசவில்லை என்று கேட்கின்றனர். ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தனது கருத்தை தெரிவிக்கலாம். கமல் வெளியிட்ட அறிக்கை அமைச்சர்களின் விமர்சனத்துக்கு கிடைத்துள்ள வித்தியாசமான எதிர்வினை என்று நினைக்கிறேன்.

ஞாநி (பத்திரிகையாளர்):

லஞ்ச, ஊழல்கள் பற்றி அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும்படி ரசிகர்களையும் சக தமிழக மக்களையும் கமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆம் ஆத்மி போல் தமிழகத்தில் லஞ்சத்துக்கு எதிரான அரசியல் இயக்கத்தை கமல் முன்னின்று நடத்த இது தொடக்கப்புள்ளி. இது புள்ளியாக நிற்காமல் கோடாக இழுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் தொடர்ந்து வெற்றிடம் இருந்து வருகிறது. மக்கள் நிச்சயம் மாற்றத்தை எதிர்பாக்கிறார்கள். ஆனால், அதற்கான சரியான தலைமையோ, அமைப்போ உருவாகாமல் இருப்பதுதான் பிரச்சினை. எனவே, கமல் நல்ல அமைப்பை உருவாக்கி, தொடர்ந்து சிறப்பாக வழி நடத்தினால்தான் வெற்றி பெறும்.

பி.ஆர்.பாண்டியன் (தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்):

ஆளுங்கட்சியின் ஊழல்களை எதிர்த்து கமல் தைரியமாக குரல் எழுப்பியிருக்கிறார். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். திரையுலகில் சிறந்த நடிகராக மட்டுமின்றி சமூக சிந்தனையாளராகவும் திகழ்கிறார். தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இருப்பினும் கமல்ஹாசனின் திரையுலக புகழ் மட்டும் அவருக்கு வெற்றியைத் தேடித் தராது. ஒருவர் அரசியலில் சாதனை படைக்க மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம். தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களில் கமல் பங்கேற்க வேண்டும். மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே கமல் வெற்றி பெற முடியும்.

பார்த்திபன் (நடிகர், இயக்குநர்):

கமல்ஹாசன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்கூட எதையும் மறைத்து வைக்க மாட்டார். வருமான வரியை சரியாகக் கட்டக்கூடியவர். அதனால்தான் அவரால் துணிச்சலோடு கேள்வி கேட்க முடிகிறது. அதை நாமும் வரவேற்க வேண்டும். அரசுக்கு எதிரான கருத்தை ஒருவர் பதிவு செய்யும்போது அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்களது கடமை. சினிமாவில் கேளிக்கை வரி விஷயத்தில் லஞ்சம் இருப்பது உண்மை. இதையெல்லாம் வைத்துதான் அவரது ஊழல் குறித்த அந்த அறிக்கை இருந்தது. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை கடந்து இப்படி கேள்வி கேட்போம் என்ற பார்வையை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்.

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கத் தலைவர்):

சிவாஜிக்கு பிறகு பெரிய நடிகராக விளங்குபவர் கமல்ஹாசன். இப்போது போகிற போக்கில் இந்த சிஸ்டம் கெட்டிருக்கிறது என்றும், எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர்களின் எதிர்வினை என்பது தரக்குறைவாக இருந்தது.

கமலை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதால் ஏற்பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் இப்போது அவரது எதிர்வினையாக இருக்கிறது. ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்பது ஏற்புடையதாக இருக்கும். அதிமுக மீது உள்ள கோபத்தை தணிப்பதற்கு அவர் திமுகவின் பக்கம் திசை திரும்பி போனால், அரசியல் அமைப்பு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சரியான அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x