Published : 20 Apr 2016 08:03 AM
Last Updated : 20 Apr 2016 08:03 AM

9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசுப் பணியில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி-யின் வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி, குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் முடிவடையப் போகிறது. கிட்டதட்ட தேர்வு நடந்து முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. முதல்நிலைத் தேர்வை தொடர்ந்து அடுத்த கட்டமாக மெயின் தேர்வு, நேர்காணல் நடத்தப்பட வேண்டும். 9 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வு முடிவே இன்னும் வெளியிடப்படாத நிலையில் எப்போது மெயின் தேர்வை நடத்தப் போகிறார்களோ? என்று தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் விரக்தியில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கும் அதேபோல் பணியாளர் தேர்வாணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) தேர்வுகளுக்கும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு விடுகின்றன. ஓராண்டுக்குள் பணி நியமனமும் பெற்றுவிடலாம். ஆனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்படவே ஓராண்டுக்கு மேல் ஆகிவிடுகிறது. அதன்பிறகு, மெயின் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு என இவ்வளவு பணிகள் முடிந்து பணி நியமன ஆணை கிடைக்க 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படித்து வரும் பட்டதாரிகள்.

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் கடந்த மாதமே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்திய அரசியல் சாசன அமைப்பான டிஎன்பிஎஸ்சி-யை தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது. ஆனாலும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து நீடித்து வரும் காலதாமதம் தேர்வர்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்குப் படிக்கும் ஆர்வமே போய்விட்டது என்று கூறி முதல்நிலைத் தேர்வை நன்றாக எழுதியுள்ள சில தேர்வர்கள் ஆதங்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x