Published : 28 Feb 2015 04:47 PM
Last Updated : 28 Feb 2015 04:47 PM

6-வது முறையாக முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி

தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும், அந்த விழைவு தன்னைப் பிடித்து உந்தித் தள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில், அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசியது:

"ஆண்டுதோறும் இங்கே நடைபெறுகின்ற தளபதி ஸ்டாலினுடைய பிறந்த நாள் விழாக்களில் நான் கலந்து கொள்வது என்பது - கட்சியினுடைய தலைவன் என்ற முறையிலே அல்ல - பிறந்த நாள் யாருக்குக் கொண்டாடப்படுகிறதோ, அந்தக் கதாநாயகனுடைய தந்தை என்ற முறையில் நான் மகிழ்ச்சியும், பெரும் களிப்பும், உற்சாகமும் பெறுவது வழக்கம்.

அந்த வழக்கத்தையொட்டி, இன்று நடைபெறுகின்ற இந்த விழாவில் உங்களையெல்லாம் கண்குளிரக் கண்டு, வாழ்த்தி, வணங்கி - கழகத்திற்கு வரவிருக்கின்ற பல்வேறு சோதனைகளைக் கடந்து செல்வது எப்படி? எவ்வகையில்? யார் யாருடைய துணையைக் கொண்டு என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து ஆவன செய்யவும், உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவே நான் கருதுகிறேன்.

முதல்வர் ஆசை...

நான் இந்த விழாவிலே ஒரேயொரு கருத்தை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். எனக்கு முன்னால் பேசியவர் குறிப்பிட்டதைப் போல ஆறாவது முறையாக நம்முடைய கருணாநிதி, முதல்வராக வரவேண்டுமென்று சொன்னாரே, அந்த ஆசை அல்ல எனக்கு; அந்த விழைவு என்னைப் பிடித்து உந்தித் தள்ளவில்லை.

நான் படுகின்ற ஆசையெல்லாம், கொண்டுள்ள விருப்பமெல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டும். கடைசி தொண்டர் உள்ள வரை இந்தக் கழகத்தை எதிரிக்கு விட்டுக் கொடுக்க முடியாது, சமுதாயத்திலே, பொருளாதாரத்திலே இன்றைக்கு வாடி வதங்கிக் கிடக்கின்ற தோழர்கள், ஏழை யெளிய மக்களின் பிரதிநிதிகள் எல்லாம் வாழுவதற்கு இந்தக் கழகத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்திருப்போர், இந்தக் கழகத்தை தங்கள் சுயநலத்திற்காவது, இந்தச் சமுதாயத்தின் நலன்களுக்காகவாவது, காப்பாற்ற வேண்டும்.

அப்படிக் காப்பாற்றுவது தான் இந்த இயக்கத்தை வாழ வைப்பது தான் நம்முடைய தலையாய கடமை என்ற உணர்வோடு பாடுபட வேண்டும். இல்லையேல் நாம் நன்றி மறந்தவர்களாக ஆவோம்.

இந்தக் கழகம் தான் நம்மை ஆளாக்கியது. இந்தக் கழகம் தான் நமக்கு "சூத்திரப்" பட்டத்தை விலக்கி, நீ தமிழன், திராவிடன், திராவிடச் சமுதாயத்திலே ஓர் அங்கம், நீ அண்ணாவின் தம்பி, பாரதிதாசனின் மாணவன் என்ற இந்தப் பெருமைகள் எல்லாம் இன்றைக்கு நமக்கு இருக்கிறது என்றால், இந்தப் பெருமையோடு நாம் கடைசி வரையிலே இந்தச் சமுதாயத்துக்கு உழைத்தோம் என்கிற பெருமையோடு திகழ வேண்டும்.

அதற்கு, நமக்குப் பிறகும் நம்முடைய பெயர், நம்முடைய உழைப்பின் பெயரால் - நம்முடைய செல்வாக்கின் பெயரால் - தமிழகத்திலே நீடித்து நிலைத்திருக்குமேயானால் - அது தான் நாம் இந்த இயக்கத்தின் காரணமாக இந்தக் கட்சியின் காரணமாக திராவிடச் சமுதாயத்துக்குத் தருகின்ற பரிசு, பெரிய கொடை என்பதை உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x