Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

6 புதிய பிரீமியம் ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

காமாக்யா (அசாம்) – சென்னை சென்ட்ரல், ஹவுரா – சென்னை சென்ட்ரல், ஜெய்ப்பூர் – மதுரை உள்பட 6 புதிய பிரீமியம் ரயில்களை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

தெற்கு ரயில்வேயின் 2014-15ம் ஆண்டுக் கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் 6 புதிய பிரீமியம் ரயில்கள், 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 4 பயணிகள் ரயில்கள் குறித்தும் ரயில்களின் வேகம் அதிகரிப்பு, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிரீமியம் ரயில்கள்

காமாக்யா (அசாம்) – சென்னை சென்ட்ரல் வாராந்திர ஏ.சி. பிரீமியம் ரயில் (எண்: 12528), மால்டா டவுன், ஹவுரா, விசாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும். காமாக்யாவில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை பகல் 2.25 மணிக்கு சென்னை வந்துசேரும். சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை மாலை 5.20 மணிக்கு புறப்படும் பிரீமியம் ரயில் (எண்: 12527), காமாக்யாவுக்கு திங்கள்கிழமை காலை 11.15 மணிக்கு போய்சேரும்.

ஹவுரா- சென்னை சென்ட்ரல் வாராந்திர ஏ.சி. பிரீமியம் ரயில், கட்டாக், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா வழியாக இயக்கப்படும். ஹவுராவில் இருந்து திங்கள்கிழமையும், சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமையும் இந்த ரயில் புறப்படும்.

பாட்னா – பெங்களூர் கன்டோன்மென்ட் வாராந்திர பிரீமியம் ரயில், முகல்சாரை, மணிக்பூர், நாக்பூர், சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும்.

ஜெய்ப்பூர் – மதுரை வாராந்திர பிரீமியம் ரயில் (எண்: 22971) ஜெய்ப்பூரில் இருந்து சனிக்கிழமைதோறும் பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரை – ஜெய்ப்பூர் வாராந்திர பிரீமியம் ரயில் (எண்: 22972), மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். இந்த ரயில் போபால், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கோவை, ஈரோடு, திருப்பத்தூர் வழியாக திருவனந்தபுரம் – பெங்களூர் சிட்டி வாரம் இருமுறை பிரீமியம் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்: 22658) திருவனந்தபுரத்தில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு பெங்களூர் போய்ச் சேரும்.

பெங்களூர் சிட்டி – திருவனந்தபுரம் பிரீமியம் ரயில் (எண்: 22657) பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு திருவனந்தபுரம் போய்ச்சேரும். இந்த ரயில்கள் இயக்கப்படும் தேதி அவ்வப்போது அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x