Published : 23 May 2015 11:10 AM
Last Updated : 23 May 2015 11:10 AM

5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கிய 27 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி ப.மோகன், ப.வளர்மதி உள்ளிட்ட 28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் பங்கேற்பு

இந்தப் பதவியேற்பு விழாவில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு, ராம்குமார், விக்கிரமன், இசைமைப்பாளர் இளையராஜா, சிவகுமார், கார்த்தி, அர்ஜூன் உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் பங்கேற்றனர்.

அதிமுக தொண்டர்களின் கட்டற்ற உற்சாகம்

மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, எழிலகம், அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம் ஆகிய பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள், தட்டிகள் வைத்தும் தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். சாலையின் இரு பகுதிகளிலும் தொண்டர்கள் கைகளை உயர்த்தி ஆரவாரமாக ஜெயலலிதாவை வரவேற்றனர். ஆண்களும் பெண்களும் ஆட்டம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

உழைப்பாளர் சிலை அருகே நான்கு பெரிய திரைகள்

அதிமுக தொண்டர்கள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியைக் காண்பதற்காக உழைப்பாளர் சிலை அருகே நான்கு பெரிய திரைகள் அமைக்கப்பட்டன. பதவு ஏற்பு விழாவில் நடக்கும் நிகழ்வுகளை பெரிய திரைகள் மூலமாக நேரடியாகக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திரைகள் வழியாக ஜெயலலிதா பதவியேற்பைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பதவியேற்பு விழாவையொட்டி, சென்னை பல்கலைக்கழகம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், அண்ணாசாலை என பல இடங்களிலும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எழிலகத்தில் கண்காணிப்புக்காக நவீன கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன் ஒன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பாதிப்பு

அதிகாலையில் தொடங்கிய போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதால், அலுவலகம் செல்லும் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். அதிமுகவினர் பல பகுதிகளில் குவிந்திருந்ததால் சென்னை பல்கலைக் கழகம் தொடங்கி போயஸ் தோட்டம் வரை வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.

போயஸ் தோட்டம் திரும்பினார் ஜெ.

முதல்வராக பதவியேற்ற பிறகு சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் இருந்து ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்துக்கு திரும்பினார். வழியில் தொண்டர்களைப் பார்த்து கையசப்பதற்காகவே, ஜெயலலிதாவின் பாதுகாப்பு வாகனம் மெதுவாகச் சென்றது.

தொண்டர்களின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்த சென்னை கடற்கரை சாலை

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பாதுகாப்பு வாகனத்தில் கையசைத்தபடி சென்ற ஜெயலலிதாவைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த தொண்டர்கள் எண்ணிக்கையால் சென்னை சற்றே அதிர்ந்தது. நடனம் ஆடியபடி தொண்டர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தடுப்பு வேலிகள் தாண்டியும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், கயிறு மூலம் சங்கில்த் தொடர் ஏற்படுத்தி காவல்துறையினர் அதிமுக தொண்டர்களைக் கட்டுப்படுத்தினர்.

நாளைய எதிர்பார்ப்பு

ஜெயலலிதாவுக்கு இன்று (சனிக்கிழமை) தலைமைச் செயலகத்துக்கு செல்லும் திட்டம் இல்லை என்று கூறப்பட்டது.

ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்த முதல் நாளில் தமிழகத்தில் மேலும் 700 அம்மா உணவகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும், அம்மா மருந்தகம் திட்டம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்துவைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து, கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின. இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கத்து.

படங்கள் : ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x