Last Updated : 15 Jul, 2016 02:56 PM

 

Published : 15 Jul 2016 02:56 PM
Last Updated : 15 Jul 2016 02:56 PM

5-வது ஓசூர் புத்தகத் திருவிழா தொடக்கம்: வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது

ஓசூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்கி வருகிற 24-ம் தேதி வரை ஆர்.கே.மஹாலில் கோலாகலமாக‌ நடைபெறுகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ள நூல்களும் இடம் பெறுவதால் ஏராளமானோர் திரண்டு வந்து பார்வையிடுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், பி.எம்.சி டெக், இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து 5-வது ஆண்டாக ஓசூரில் புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. அங்குள்ள ஆர்.கே.மஹாலில் இன்று தொடங்கி, வ‌ருகிற 24-ம் தேதி வரை நடக்கிறது. இந்த‌ 10 நாட்களும் நாள்தோறும் காலை 11 முதல் இரவு 9.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி பதிப்பகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, அரசியல், சமூகம், ஆன்மிகம், அறிவியல், பொறியியல், மருத்துவம், சமையல், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் இடம் பெறுகின்றன. இது தவிர கல்வி தொடர்பான‌ சிடிக்கள், குழந்தைகள் அறிவியல் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவகம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்வில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்பாட்டா ளர்கள் சிவக்குமார், பெருமாள், சேதுராமன் ஆகியோர் புத்தகத் திருவிழா குறித்து அறிமுக வுரை ஆற்றுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஓசூர் சார் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

மாலையில் சிறப்புரை

இதையடுத்து இரவு 7 மணிக்கு புத்தகத் திருவிழாவின் கருத்தரங்கை முனைவர் அப்துல் காதர் தொடங்கி வைத்து ‘ஆறாவது விரல்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதே போல நாள்தோறும் மாலையில் சொற் பொழிவு, பட்டிமன்றம், சிறப்பு விருந்தினர்களின் உரை, இசைக் கச்சேரி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

16-ம் தேதி மாலைமுனைவர் சி.சுந்தரவள்ளி (அறிவைத்தேடி), எழுத்தாளர் பாமயன் (வேளாண்மை இறையாண்மை), 17-ம் தேதி முனைவர் உலகநாயகி பழனி (நூலில்லாமல் நாளில்லை), 18-ம் தேதி புலவர் மா.இராமலிங்கம் (அறிவுக்கு விருந்து), 19-ம் தேதி தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட் ராமன்(உலகை உலுக்கிய புத்தகங்கள்), 20-ம் தேதி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவாரி பூச்சூடி உன்னை), 21-ம் தேதி திருநங்கை பிரியா பாபு (தமிழ் இலக்கிய வரலாற்றில் திருநங்கைகளின் பங்கு), 22-ம் தேதி ‘தி இந்து' தமிழ் நாளேட்டின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் (ஏன் புத்தக வாசிப்பு இல்லாமல் நாம் இல்லை), 23-ம் தேதி திலகவதி உதயகுமார் (ஆதிமனித உணவு முறை) , திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் (அன்பிற் சிறந்த தவமில்லை) ஆகிய தலைப்புகளில் விருந்தினர்கள் பேசுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

இதில் அரசு பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆயிரம் பேருக்கு தலா 20 ரூபாய்க்கான இலவச கூப்பன் அளிக்கப்படுகிறது. மேலும் ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 48 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவுக்கு வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அமைக்கப் பட்டிருந்த 40 அரங்குகளில் ரூ.53 லட்சத்துக்கு நூல்கள் விற்பனையானது. இந்த ஆண்டு கூடுதலாக தி இந்து (ஸ்டால் எண்: 51), சாகித்ய அகாடமி உள்ளிட்ட‌ 20 முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் 10 சதவீத கழிவுடன் விற்பனை செய்யப்படுகிறது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தகத் திருவிழாவைக் காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவுச் செல்வத்தை அள்ளிச் செல்ல அனைவரும் வரவேண்டும் என புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x