Published : 09 Sep 2015 08:44 AM
Last Updated : 09 Sep 2015 08:44 AM

43 உப சன்னதிகள், 11 கோபுரங்களுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 43 உப சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு முதல் கட்ட கும்பாபிஷேகம் இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

108 திவ்ய தேச தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ‘பூலோக வைகுண்டம்’ என்று போற்றப்படுகிறது. இந்தக் கோயிலில் 2001-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ரூ.18 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 43 உப சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்காக கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலை வட திருக்காவிரியான கொள்ளிடம் ஆற்றில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, யானை மீது தங்கக் குடத்திலும், வெள்ளிக் குடங்களிலும் புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, யாகசாலையில் வைக்கப்பட்டது.

அங்கு அக்னி பிரதிஷ்டை, யாகசாலை சகல ஹோமங்கள் தொடங்கப்பட்டு, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், இரவு நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

இன்று அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் நடத்தப்பட்டு, 5.15 மணிக்கு யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்படுகின்றன. காலை 6.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு வேத சாற்றுமுறை, பிரபந்த சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், வாகனங்களை நிறுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்புப் பணியிலும் ஏறத்தாழ 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x