Published : 09 Feb 2016 12:16 PM
Last Updated : 09 Feb 2016 12:16 PM

3 மாணவிகள் மரணம்: வி.சி. கட்சி தொடர்பை விசாரிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவர் மர்ம மரணத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உடற்கூறு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3 மாணவிகளின் உடல்களும், அவர்களின் கைகள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதே, அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற ஐயம் எழுந்தது.

இதுகுறித்த விசாரணைக்காக மாணவிகளின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கல் செய்த உடற்கூறு ஆய்வறிக்கையில், மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகளின் நுரையீரலில் தண்ணீர் இல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்து, மாணவிகளை படுகொலை செய்தது யார்? என்ற வினாவுக்கு விடை கண்டுபிடிக்கப்பட வேண்டும். 3 மாணவிகளின் உடற்கூறு ஆய்வறிக்கை வருவதற்கு முன்பே, "அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை; அவர்களை யாரோ படுகொலை செய்திருக்கிறார்கள்" என கல்லூரியின் நிர்வாகி வாசுகி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

அவரது இந்த வாக்குமூலம் சரியானது தானா? அல்லது விசாரணையை திசை திருப்புவதற்காக சொல்லப்பட்ட ஒன்றா? என்பதை கண்டறிவதன் மூலம் தான் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.

கொல்லப்பட்ட மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறது.

கல்லூரியில் சிறிய அளவில் மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அவர்களை கல்லூரி நிர்வாகம் கடுமையாக தாக்கியிருக்கிறது. மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மற்ற மாணவ, மாணவியரை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், அவர்களுக்கு முடிவுரை எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் மாணவர்களால் எழுப்பப்படும் சந்தேங்களை அடியோடு புறந்தள்ளிவிட முடியாது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் இயற்கை மருத்துவக் கல்லூரியை நடத்தி வந்த வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் சுவாக்கர் வர்மா ஆகியோர், அதை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை ஒடுக்குவதற்காகவே பெரு.வெங்கடேசன் என்ற கூலிப்படைத் தலைவனை நியமனம் செய்திருந்தனர். கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக அவர் எந்த நேரமும் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவிகளை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வரிசைத் தலைவர்கள் சிலரும் சாதிப் பாசம் காரணமாக கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு துணை நின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தான் பல்கலைக்கழகத்தின் அப்போதைய பதிவாளர் ஜான்சியிடம் பேசி கல்லூரி மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டி, அச்சுறுத்தி வைத்திருந்த கூலிப்படைத் தலைவன் வெங்கடேசனுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை ஆதரவு வழங்கி வந்துள்ளது.

கல்லூரி நிர்வாகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அப்பாவி மாணவிகள் 3 பேரின் படுகொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவு அளித்தது யார்? என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை தமிழக காவல்துறை அடையாளம் காட்ட வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x