Published : 30 Jul 2014 03:29 PM
Last Updated : 30 Jul 2014 03:29 PM

25 மாவட்டங்களில் புதிதாக 128 தொடக்கப் பள்ளிகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது தொடர்பாக விதி 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில்:

" 1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

4.நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

5. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

6. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் ஆணையிடப்படுகிறது.இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x