Published : 20 May 2015 08:09 AM
Last Updated : 20 May 2015 08:09 AM

22-ம் தேதி தலைவர்கள் சிலைக்கு மரியாதை: முதல்வராக ஜெ. 23-ல் பதவியேற்பு - ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான நிலையில், ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கும் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். 23-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா இழந்தார். தொடர்ந்து நிதியமைச் சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஜெயலலிதா அக்டோபர் 18-ம் தேதி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு வரை தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக அவர் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவில்லை. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலி தாவை விடுதலை செய்தது.

இதையடுத்து, மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப் பேற்பதில் இருந்த தடைகள் அகன்றன. ஜெயலலிதாவை சட்டப் பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 22-ம் தேதி பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு ஜெயலலிதா மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு:

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மே 22-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகில் உள்ள அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் சிலைக்கும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் பதவி ஏற்பு குறித்து கட்சி வட்டாரத்தில் கூறியதாவது:

22-ம் தேதி காலை 7 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் ஆகியவை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கப் படுகிறது. இதை தொடர்ந்து ஏழு மாதங்களுக்குப்பின் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியில் வரும் ஜெயலலிதா, தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தொண்டர்களை சந்திப்பார். மறுநாள் 23-ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடக்கும். இதில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்ட சிலர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

எனினும் பதவி ஏற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x