Published : 26 May 2016 11:18 AM
Last Updated : 26 May 2016 11:18 AM

1,400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டீஸ்: பல்லவர்களின் கூரம் செப்பேடு தரும் அரிய தகவல்கள்

நாடு முழுவதும் 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டீஸ்) மாற்றுவதற்கான தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. ஆனால், 1,400 வருடங்களுக்கு முன்பே பல்லவர்கள் ஆட்சியில் பொலிவுறு நகரங்கள் உருவாக்கப்பட்டதை கூரம் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது.

கி.பி. 550 முதல் 560 வரையில் காஞ்சியை ஆண்ட முதலாம் பர மேஸ்வரவர்மன் தனது பெயரில் பரமேஸ்வரமங்கலம் என்ற பொலிவுறு நகரை உருவாக்கினான். அப்போது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறை அலகுகளை கூரம் செப்பேடு விவரிக்கிறது.

விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண்வளம், நிரந்த நீர் மேலாண்மை திட்டம், தண்ணீர் பகிர்மான அல குகள், கட்டுமானத்துக்கு ஏற்ற தரமான மண் வள பகுதி, கோயில் மண்டபம், நிரந்தர வைப்புக்காக வழங்கப்பட்ட தானங்கள் இவற்றோடு வணிக பெருமக்கள், கருவிகள் தயாரிப்போர், அறிவுசார் பெருமக்கள் ஆகியோருக்கான வசதிகள் இவை அனைத்தும் பொலிவுறு நகர் உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது அரக்கோணம் அரு கில் உள்ள பரமேஸ்வரமங்கலத்தை பொலிவுறு நகராக வடிவமைப்ப தற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்ட து. இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியி டம் தரப்பட்டது. பொலிவுறு நகரில் முதலில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டது.

இங்கு தண்ணீரைப் பயன்ப டுத்தும் பகிர்மான உரிமைகள் அனைத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப்பட்டன. கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வ தற்காகவே சூளைமேட்டுப்பட்டி என்ற பகுதி உருவாக்கப்பட்டது.

ஆன்மிக திருவிழாக்கள் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதால் பொலிவுறு நகரில் முதலில் கோயில் எழுப் பப்பட்டது. ஊருக்கு நடுவில், பாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் செயல்பட்டன. வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. உலக வணிகர்கள் வர்த்தகம் செய்வதற்கான பாது காப்பான வழிமுறைகளும் ஏற்ப டுத்தப்பட்டன.

இதுகுறித்து மேலும் தகவல்க ளைத் தந்த வரலாற்று ஆய்வாள ரும் சேலம் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ‘‘கூரம் செப்பேடு 7 ஏடுகளை (14 பக்கங்கள்) கொண் டது. இதில் 10 பக்கங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 4 பக்கங்கள் தமிழில் உள்ளன. இதில்தான் பரமேஸ்வரமங்கலம் உருவாக்கப்பட்ட விதம் விவரிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது பொலிவுறு நகரங்களாக மொகஞ்சதாரோ, ஹரப்பாவை சொல்லலாம். அகன்ற வீதிகள், வீடுதோறும் குளியலறைகள், பாதாளச் சாக்கடைகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட இப்போது நமது விவாதத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இந்நகரங்களில் இருந் தன. அதேபோல், சங்ககால தமிழர்களின் பொலிவுறு நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டு மதுரை. தாமரை மலரின் வடிவத் தைக் கொண்ட மதுரை நகரில் தெருக்கள் ஆறுகளைப் போல நீண்டும் அகன்றும் இருந்ததை ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெ ரு’ என்று புகழ்கிறது பரிபாடல். பரமேஸ்வரமங்கலமும் இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x