Published : 21 Aug 2014 12:00 AM
Last Updated : 21 Aug 2014 12:00 AM

104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா?: தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104 மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.

2013 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

10,736 பேர் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாகி உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 104 மதிப்பெண், 99 மதிப்பெண் எடுத்த பலருக்கு ஆசிரியர் பணி கிடைக்காத நிலையில், 82 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாக தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, கடந்தமுறை வரை நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதிகம் பேர் தேர்ச்சி பெறாததால், இந்தமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்தது. ஆனால், ஆசிரியர் பணி கிடைக்க பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண், டிகிரிக்கு 15 மதிப்பெண், பி.எட்.க்கு 15 மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வில் 150 மதிப்பெண் எடுத்தால் 60 மதிப்பெண் எனவும் கணக்கிடப்பட்டது.

இந்த மதிப்பெண் ‘கட்ஆப்’படி, இந்தமுறை ஆசிரியர் பணிக்கு தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய முறையால் ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 104, 100, 99, 95 என கூடுதல் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிளஸ் டூ, டிகிரி மற்றும் பி.எட். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.

அதனால், இந்தமுறை பெரும்பாலும் கடந்த 10 ஆண்டுகளில் பிளஸ் டூ, டிகிரி, பி.எட். படித்த புதியவர்களுக்கே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், கல்வியில் சாதிக்க எத்தனையோ வாய்ப்பு வசதிகள் கிடைத்துள்ளன. அதனால், பிளஸ் டூ தேர்வில் 1000 மதிப்பெண் எடுப்பது சுலபம். ஆனால், கடந்த காலத்தில் கூடுதல் மதிப்பெண் எடுப்பது கடினம்.

அப்படியிருக்கும்போது, தற்போது அரசு கடைப்பிடிக்கும் புதிய தேர்வு முறையால் புதியவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பழையவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் எவ்வளவு கூடுதல் மதிப்பெண் எடுத்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவால் பணி கிடைக்க வாய்ப்பில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்னை எடுத்துக்கொண்டால் மட்டுமே பி.எட். படித்த எல்லோருக்கு ஆசிரியர் பணியில் சமவாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் பி.எட். படித்த சீனியர்களுக்கு ஆசிரியர் பணிக்கு வாய்ப்பே இல்லை. இந்த முறையை மாற்ற தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x