Last Updated : 27 Sep, 2016 02:44 PM

 

Published : 27 Sep 2016 02:44 PM
Last Updated : 27 Sep 2016 02:44 PM

100 பேரில் 36 பேருக்கு மட்டுமே வாய்ப்பு: அதிமுக தலைமைக்கு கோவையிலிருந்து பறக்கும் புகார்கள்

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் பழைய கவுன்சிலர்கள் 36 பேருக்கு மட்டுமே ‘சீட்’ கிடைத்துள்ளதால், மற்றவர்களிடம் அதிருப்தி மேலோங்கியிருக்கிறது. அதையடுத்து கட்சித் தலைமைக்கு புதியவர்கள் மீது புகார் கடிதங்கள் பறந்த வண்ணம் உள்ளன.

அதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனடியாக இன்று மதியம் 12 மணிமுதல் 1 மணிக்குள் வேட்பு மனு தாக்கலை முடித்துக் கொள்ளுமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனால், ‘இந்த புகார் மனுக்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற குஷியில் ‘சீட்’ கிடைத்தவர்கள் அதற்கான வேலைகளில் மும்மரம் காட்டுகின்றனர்.

கனவாகிப்போன 'சீட்'

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மேயர் கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ‘சீட்’ கிடைக்காத நிலையில், மேயர் பதவியே அவர்களின் அடுத்த குறியாக இருந்தது. அப்பதவியை, கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பர் என்று அறிவித்த பின்பு அவர்களில் 90 சதவீதம் பேர் எண்ணம் வெறும் கனவாகிப்போனது.

இருப்பினும், மேயர் வேட்பாளர் என்று மறைமுகமாக தலைமை வலியுறுத்தி கவுன்சிலராக அறிவிக்காதா என்ற ஏக்கம் தொக்கி நின்றது. அப்படியும் எதுவும் நடக்காமல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதால் அந்தக் கனவும் கானல் நீராகிப் போனது.

காங்., தேமுதிக

இப்போதைய பட்டியல்படி மொத்தம் 100 வார்டுகளில் முன்னாள் கவுன்சிலர்கள் அல்லது (பெண்களுக்கான வார்டு என்றால்) அவர்கள் குடும்பத்தில் என்ற கணக்கில் 36 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலிருந்து வந்த லதா திருமுகம், தேமுதிகவிலிருந்து வந்த தமிழ்முருகன் போன்றோருக்கு ‘சீட்’ கிடைத்துள்ளது. 3 முறை கவுன்சிலராக இருந்த தாமரை செல்வி, சிங்கை பாலன், ஆர்.பிரபாகரன், 2 தடவை கவுன்சில ராக இருந்த லீலாவதி உண்ணி (துணை மேயர்), முத்துசாமி, சேதுவராஜ், மண்டலத் தலைவராக இருந்த கே.ஆர்.ஜெயராம், ஆதிநாராயணன். சாவித்திரி பார்த்தீபன் ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் துணை மேயர் சின்னத்துரைக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை. போட்டியிடவேண்டி, தற்போதைய மேயர் ராஜ்குமார், தனக்கோ தன் மனைவிக்கோ விண்ணப்பம் அளிக்கவில்லை.

மேயர் வாய்ப்பு யாருக்கு?

கோவை மேயர் பதவி பெண்களுக்கானது என்பதால் அப்பதவிக்கு துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்ட 3 பெண்களின் பெயர்கள் மட்டும் கட்சிக்குள் அடிபடுகிறது. அதிலும், புத்தம்புது முகத்துக்கே மேயர் வாய்ப்பு என்பதால், அந்த வார்டில் 3 மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்ற பேச்சும் பரவலாக உள்ளது.

கோவையில் போட்டியிட விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் அளித்தபோதே, விண்ணப்பங் களைவிட தன் வார்டில் உள்ளவர்களில் இன்னின்னார் கட்சிக்கு விரோதம் கற்பிப்பவர்கள்; எனக்கு ‘சீட்’ தராவிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு ‘சீட்’ கொடுத்துவிடாதீர்கள் என்ற கோரிக்கை மனுக்களே நிறைய வந்ததாம். அப்படி புகார் மனுக்களுக்கு உள்ளானவர்களுக்கும் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது மீண்டும் புகார்கள் பறந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ‘சீட்’ கிடைத்த சீனியர் கவுன்சிலர் ‘தி இந்து’-விடம் கூறும்போது, ‘நாளைக்கு (இன்று) மதியம் 12 முதல் 1 வரைதான் எங்களுக்கு மனுதாக்கல் செய்யும் நேரம் என்று தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. எனவே எங்களுக்குரிய ஆவணங்கள் பெறவே நேரம் போதாத நிலை உள்ளது. 5 மண்டல அலுவலகங்களுக்கும், காவல்நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும் மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறோம். இப்படியிருக்க, எங்கள் மீது அளித்த புகார் மீது தலைமை நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்ன?’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x