Published : 17 Sep 2014 10:29 AM
Last Updated : 17 Sep 2014 10:29 AM

10 குழந்தைகளின் தாய் 11-வது பிரசவத்தில் மரணம்: திண்டுக்கல் அருகே பரிதாபம் - வீட்டிலேயே சுகப்பிரசவம் கண்டவருக்கு மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்

திண்டுக்கல் அருகே 10 குழந்தைகளின் தாய், 11-வது பிரசவத்தில் இறந்தார். மருத்துவமனைக்கு வர அஞ்சி 10 பிரசவங்களையும் வீட்டிலேயே கண்டவர் இறந்ததால், குழந்தைகள் தாயை இழந்து தவிக்கின்றனர்.

திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு முத்தமிழ்(16), மகாலட்சுமி(15), சத்தியலட்சுமி(14), யோகலட்சுமி(12), விவேகன்(10), கஜேந்திரன்(9), சீத்தா(8), பிரபாவதி(6), குமரேசன்(2 ½), மாரிஸ்வரி(1 ½), ஆகிய 10 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா மீண்டும் 11-வது முறையாக கர்ப்பமடைந்தார். எட்டுமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

சித்ராவை உறவினர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சித்ராவுக்கு இதற்கு முன் ஒருமுறைகூட அரசு மருத்துவமனையில் பிரசவம் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 10 பிரசவங்களும் அவரது வீட்டிலேயே நடந்துள்ளன. இந்த முறையும் வீட்டில்தான் பிரசவம் பார்க்க உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சித்ராவுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை, சில நாள்களுக்கு முன்பே இறந்துள்ளதாகவும், குழந்தை இறந்தது தெரியாமல் அவர் சிகிச்சை பெறத் தவறியதால் வயிற்றில் ரத்தப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செவிலியர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும்

3-வது பிரசவத்துக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமடைந்தால், இந்தத் தகவலை கிராமப்புற செவிலியர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் அழைத்து ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஒரு பெண் கர்ப்பமடைந்தால், உடனே அவரை சுகாதாரத்துறை கண்காணிப்பில் கிராமப்புற செவிலியர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், தோட்டனூத்தைச் சேர்ந்த சித்ராவுக்கு பத்து பிரசவங்கள் வீட்டிலேயே நடந்துள்ளன. இந்நிலையில், அவர் 11-வது முறை கர்ப்பமடைந்த தகவலை இதுவரை சுகாதாரத்துறை களப்பணியாளர்கள், கிராம செவிலியர் கண்காணிக்காமல், மருத்துவப் பரிசோதனை செய்யாமல் விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

வீடுகளில் பிரசவம் நடப்பதை நூறு சதவீதம் தடுக்க அரசு, 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையும் அமைத்து வருகிறது. ஆனால், அனைத்து மருத்துவ வசதிகளும், களப்பணிக்கு சுகாதாரப் பணியாளர்கள் இருந்தும் சித்ரா மரணமடைந்த சம்பவம், சுகாதாரத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்ரா இறந்ததால் அவரது 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்த குழந்தைகளுக்கு உதவவும், அந்தக் குழந்தைகள் கல்வியைத் தடையின்றி தொடர ஏற்பாடு செய்யவும் சுகாதாரத் துறையினர் மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

துணை சுகாதார நிலையத்தின் பின்புறம் வீடு

சித்ராவின் வீடு, தோட்டனூத்து துணை சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ளது. அருகே எம்.எம்.கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. சித்ரா 11-வது முறையாக கர்ப்பமடைந்த தகவல், அவரது வீட்டுக்கு முன் இருந்த துணை சுகாதார நிலையத்துக்கு தெரிந்திருந்தும், அவர்கள் உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் வரதராஜனிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு முறை பிரசவம் நடக்கும்போதும், அவர் அரசு மருத்துவமனைக்கு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்து விடுவார்கள் என அஞ்சி மறுத்துள்ளார். சுகாதாரத்துறையினர், 3-வது பிரசவத்துக்குப் பின் அவரை குடும்பக் கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அவர் கவுன்சலிங்குக்கு வரவும், சிகிச்சை பெறவும் பிடிவாதமாக மறுத்துள்ளார். அவரது ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் இறந்து, அவரது குழந்தையும் வயிற்றிலேயே இறந்துள்ளது பரிதாபத்துக்குரியது’ என்றார்.

தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்

மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிக்கலா கூறும்போது,

`11-வது முறையாக கர்ப்பமடைந்த சித்ரா, மருத்துவமனைக்கு வர மறுப்பதை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட கிராமப்புற செவிலியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். 5 குழந்தைகளுக்கு மேல் கர்ப்பமடைந்த பிறகாவது சித்ராவுக்கும், அவரது கணவருக்கும் கட்டாயப்படுத்தியாவது குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.

தற்போது இறந்த சித்ராவின் குழந்தைகள் நிலை, அடுத்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், அந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள கர்ப்பிணிகள், சுகாதாரத்துறை கண்காணிப்பில் யாராவது விடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய சிறப்பு முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x