Last Updated : 18 Jul, 2015 12:20 PM

 

Published : 18 Jul 2015 12:20 PM
Last Updated : 18 Jul 2015 12:20 PM

ஹெல்மெட் அணியாத பெண் காவலர் மீது நடவடிக்கை: போக்குவரத்து காவல்துறைக்கு ஃபேஸ்புக்கில் குவிந்த பாராட்டு

ஹெல்மெட் அணியாத பெண் காவலருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை பாராட்டி அத்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் லைக்குகள் குவிந்தன.

கடந்த மாதம் (ஜூன் மாதம்) பெண் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல், மூன்று பேருடன் பதிவு எண்.TN 49 AP 0229 கொண்ட வாகனத்தில் பயணித்ததாக ஜான் பீட்டர் என்பவர் போக்குவரத்து காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளதாக, கீழ்பாக்கம் ஜி-3 போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் கடந்த வியாழன் அன்று (ஜூலை 16-ம் தேதி) போக்குவரத்து போலீஸார் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவு செய்திருந்தார்.

தன் துறை சார்ந்த ஊழியர் மீதே நடவடிக்கை எடுத்ததற்கு மாநகர போக்குவரத்து காவல்துறையை பாராட்டி ஃபேஸ்புக்கில் லைக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சிலர் பாராட்டு கருத்துகளையும் பதிவு செய்திருந்தனர்.

இருப்பினும், பெண் காவலருக்கு மட்டும் ரூ.200 அபராதம் விதித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்களிடம் மட்டும் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுவதாக சிலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சென்னை போக்குவரத்து போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "புகாருக்குள்ளான பெண் காவலருக்கு ரூ.200 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் மீதான புகார் கடந்த ஜூன் மாதம் அளிக்கப்பட்டது. அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வரவில்லை. எனவேதான், அவருக்கு ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.100, டிரிபிள்ஸ் சென்றதற்கு ரூ.100 என மொத்தம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x