Published : 16 Feb 2015 04:49 PM
Last Updated : 16 Feb 2015 04:49 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக 96,500 வாக்குகளில் வெற்றி

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி மொத்தம் 1,51,561 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் 5015 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை 1552 வாக்குகளும் பெற்றனர். 'நோட்டா'வுக்கு மொத்தம் 1919 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 1167 வாக்குகள் பெற்றுள்ளார்.

இரண்டாவது சுற்று முடிந்தவுடனேயே பெருவாரியான வாக்குகள் வித்தியாசம் காணப்பட்டதால், அதிமுக ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் பகிர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக, மார்க்சிஸ்ட் டெபாசிட் இழப்பு

இடைத்தேர்தலில் 5015 வாக்குகள் மட்டுமே கைப்பற்றிய பாஜக டெபாசிட் இழந்தது. இதேபோல், நான்காவது இடத்தைப் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் டெபாசிட் இழந்தது. திமுக தவிர போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்தினார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி. | படிக்க - >வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி |

பலனளித்தது பணப்பட்டுவாடா: ஸ்டாலின்

ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா பலனளித்துள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா பலனளித்துள்ளது" என்றார்.

பணபலத்துக்கு வெற்றி: பாஜக

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து, ஆளும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார் | படிக்க - >ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலத்துக்கு வெற்றி: தமிழிசை |

அதேவேளையில், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என்றும், விஜயகாந்த் ஏமாற்றம் அளித்தார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார். | படிக்க - >ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது: பாஜக வேட்பாளர் |

புறக்கணிப்பு நியாயமே: காங்.

இந்தத் இடைத்தேர்தலை தமது கட்சி புறக்கணித்தது நியாயமானதே என்று கூறி, சில காரணங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். | படிக்க - ஸ்ரீரங்கம் தேர்தலை காங். புறக்கணித்தது நியாயமே: இளங்கோவன் |

ட்விட்டரில் ராமதாஸ் கருத்து

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகளை ட்விட்டரில் விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தனி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதால், தனது முதல்வர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. வாக்குப்பதிவு 13-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2,70,281 வாக்காளர்கள் கொண்ட ஸ்ரீரங்கத்தில் 81.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆரம்பம் முதலே முன்னிலை

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்று தொடங்கி அதிமுக முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தியும், தடுப்புகளை அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x