Published : 12 May 2014 04:46 PM
Last Updated : 12 May 2014 04:46 PM

வெல்டிங் மாணவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய எஸ்.பி.- விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்குமா என ஏக்கம்

வெல்டிங் வேலை செய்து படித்து பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவரின் மேல்படிப்புக்கு எஸ்.பி. அஸ்ராகர்க் உள்பட பலர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். ஆனால் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாமல் அந்த மாணவர் ஏக்கத்தில் உள்ளார்.

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி இசக்கிமுத்துவின் மகன் மணிமாறன். பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் பெற்று மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பிடித்தார். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் பாதியிலேயே படிப்பை நிறுத்திய மணிமாறன், அதன்பின் வெல்டிங் வேலை செய்து அந்த வருமானம் மூலம் பிளஸ் 2 வரை படித்துள்ளார். வறுமையை வென்று சாதித்த இந்த மாணவர் பி.இ. கம்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறார். ஆனால் குடும்பப் பொருளாதாரம் அதற்கு தடையாக இருப்பது பற்றி 'தி இந்து' உள்ளிட்ட நாளிதழ்களில் சனிக்கிழமை செய்தி வெளியாயின.

இதையறிந்த மதுரையின் முன்னாள் எஸ்.பி.யும், தற்போதைய தருமபுரி மாவட்ட எஸ்.பி.யுமான அஸ்ராகர்க் இந்த மாணவருக்கு முதல் நபராக உதவிக்கரம் நீட்டியுள்ளார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மணிமாறன் விரும்பும் பாடப்படிப்பை பெற்றுத் தருவதாகவும், கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அஸ்ராகர்க் உறுதியளித்துள்ளார்.

இதேபோல் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மற்றும் சில தனிநபர்களும் மணிமாறனுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இதுபற்றி மாணவர் மணிமாறன் கூறியது: உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி. எஸ்.பி. முயற்சியில் எனக்கு வெளியூரில் சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். தற்போது என் குடும்பம் உள்ள சூழ்நிலையில், குடும்பத்தினரோடு இருந்து கொண்டு படிப்பதுதான் நன்றாக இருக்கும். வெளியூரில் சேர்ந்தால், என்னால் வெல்டிங் வேலை செய்து கொண்டே படிக்க முடியாது. மேலும் தந்தைக்கு உதவமுடியாமல் போவதுடன், குடும்பத்தையும் கவனிக்க முடியாது. எனவே கவுன்சலிங் மூலம் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை அனுமதி கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறேன். ஆனால் கட்-ஆப் மதிப்பெண் 192 மட்டுமே உள்ளதால் அது சாத்தியமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயன்று வருகிறேன். அப்படி கிடைக்காவிட்டால், பிறர் உதவியின்பேரில் கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியதுதான்' என்றார்.

இவருக்கு உதவ நினைப்போர் 7502230092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x