Published : 23 May 2016 01:10 PM
Last Updated : 23 May 2016 01:10 PM

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடல்;

மின் கட்டணச் சலுகைகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:

பயிர்க்கடன் தள்ளுபடி

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மின் கட்டணச் சலுகை

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண உதவித் திட்டம்

3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x