Published : 25 Apr 2017 07:25 AM
Last Updated : 25 Apr 2017 07:25 AM

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம்: கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடாது என அறிவிப்பு

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள தால் கடைகள் அடைக்கப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவது குறித்து முடிவு செய்வதற்காக கடந்த 16-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் பங்கேற்றன.

விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீட்டு குழு அமைக்க வேண்டும், தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிட வேண்டும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைகள் அடைப்பு

அதன்படி, இன்று தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், த.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் ஆதரவு தெரிவித் துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்படத் துறையினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்படு வதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிஐடியூ, ஏஐடியூசி, திமுகவின் தொமுச பேரவை உள்ளிட்ட தொழிற் சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அதே நேரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்றும் அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனாலும், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது. பால் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் ஸ்டாலின் மறியல்

முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் எழும்பூர் காந்தி இர்வின் சாலை, போலீஸ் கமிஷனர் சாலை சந்திப்பில் (உடுப்பி ஹோட்டல் அருகில்) தனது கட்சியினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார். திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரவர் பகுதிகளில் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற் பார்கள் என திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாஜக மீது குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை யில், ‘முழு அடைப்புப் போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதன்மூலம் முழு அடைப்புப் போராட்டத்தை சீர்குலைக்கவும், கலகம் செய்ய வும் பாஜக திட்டமிட்டுள்ளது’ என குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x