Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

விதவிதமான பொங்கல்.. வித்தியாசப் பொங்கல்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகத்துடனும் மண்ணின் மணத்துடனும் கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை விளக்கும் விதமாக போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாளை தைப் பொங்கல். மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகியவற்றைக் கொண்டாடவும் மக்கள் தயாராகி வருகின்றனர். பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டத்தைவிடவும் அதிகமாக அவர்களது மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பி வழிகின்றன. வீட்டை சுத்தப்படுத்துவது, வெள்ளை அடிப்பது ஆகிய பணிகளும் வீட்டுக்கு வீடு விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.

பண்பாட்டு, கலாச்சார திருநாள்

பொங்கல் பண்டிகை நம் பண்பாட்டின் அடையாளம். உறவுகளின் மகத்துவத்தை உணர்த்தும் பெருவிழா. தமிழர்களின் வாழ்வாதாரமான உழவுக்கு உதவி புரியும் பகலவன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாகக் கொண்டாடப்படுகிற பொங்கல் திருநாள், உறவுகளுக்கும் சேர்த்தே வந்தனம் செய்வதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்ணுக்கு உரிய பாரம்பரியம், கலாச்சாரத்துடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

புதுப்பெண்ணுக்கு சீர்

தாமிரபரணி பாயும் நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரம் முன்னதாகவே பொங்கல் விழா களைகட்டிவிடுகிறது. புதுப்பானை, விளக்கு, கரண்டி, பச்சரிசி, புழுங்கல் அரிசி, சிறுபருப்பு, ஒரு கட்டு பனங்கிழங்கு, ஒரு கட்டு கரும்பு, மஞ்சள்கொத்து, வெல்லம், நெய், அப்பளக்கட்டு, பச்சை காய்கறிகள், பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புதுத்துணி, பணம் ஆகியவற்றை திருமணமான பெண்களுக்குப் பொங்கல் சீராகக் கொடுப்பார்கள். ஒவ்வொரு வருட பொங்கலுக்கும் சீர் கொடுப்பது மரபு என்றாலும் திருமணமான முதல் வருடம் வெகு விமரிசையாக நடக்கும் இந்தச் சீர் கொடுக்கும் படலம். அடுத்தடுத்த வருடங்களில் அனைத்துப் பொருட்களையும் கொடுக்கமுடியாவிட்டாலும் முக்கியமான பொருட்களை மட்டுமாவது சீராகக் கொடுப்பார்கள்.

நதிக்கு நன்றிச் சடங்கு

பொங்கலையொட்டி நடைபெறும் சிறுவீட்டுப் பொங்கல் வழிபாடு இந்தப் பகுதியில் பிரசித்தம். பொங்கலுக்கு மறுநாள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து மெழுகி, காவியால் சிறு வீடு வரைவார்கள். அந்த வீட்டின் மையத்தில் சிறு கற்களை அடுக்கி, பனை ஓலையால் தீ மூட்டிப் பால் காய்ச்சுவார்கள். அந்தப் பாலில் வெல்லம், ஏலக்காய் தட்டிப் போட்டு எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலத்தின் நடுவே பிடித்து வைக்கும் சாணிப் பிள்ளையாரை வரட்டியாகத் தட்டிவைப்பார்கள். இந்த வரட்டிகளில் ஏழெட்டை எடுத்து அவற்றின் மீது வாழையிலை விரித்து, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், வெல்லம் வைத்துப் படையலிடுகிறார்கள். பிறகு நதிக்கரைக்குச் சென்று அவற்றை கரைத்துவிடுகிறார்கள். நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சடங்கு செய்யப்படுகிறது.

‘வெள்ளையா, கல்லையா?’

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘சூரியப் பொங்கல்’என்ற பெயரில் காலையிலேயே பொங்கல் வைத்துவிடுகிறார்கள். புதுப்பானையில் மாக்கோலமிட்டு, கிழக்குப் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.

இந்தப் பகுதிகளில் வைக்கப்படும் ‘பட்டிப் பொங்கல்’பிரசித்தி பெற்றது. வேப்பிலையால் தோரணம் கட்டுகிறார்கள். தோரணத்துக்குக் கீழே புதுப்பானையில் மாக்கோலமிட்டு, அதன் கழுத்தில் மஞ்சள் கொத்தைச் சுற்றி, பொங்கல் வைக்கிறார்கள். பக்கத்தில் 7 கன்னிமார்களைக் குறிக்கும் வகையில் 7 கற்களை நட்டுவைத்து வழிபடுகிறார்கள். கற்களுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து, பழம், வெற்றிலை பாக்கு, வெல்லம், பொங்கல் வைத்து படையலிடுகிறார்கள். கன்னிமார்கள் வந்து அவற்றைச் சாப்பிடுவார்கள் என்பது ஐதீகம். தீபாராதனை முடிந்ததும் வீட்டுப் பெரியவர்கள், ‘வெள்ளையா கல்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அனைவரும் வெள்ளை என்று பதில் சொல்ல வேண்டும். பசுமை எப்போதும் நிறைந்திருக்க வேண்டும், தொழுவத்தில் ஆடுகளும் மாடுகளும் நிறைந்திருக்க வேண்டும் என்பது அதன் பொருள்.

பொங்கல் பொங்கியாச்சா?

சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் வைக்கும் ‘உருளு’ பாத்திரங்களை முதல்நாள் இரவே சுத்தப்படுத்தி அவற்றின் மேல் அரிசிமாக்கோலம் போடுகிறார்கள். பொங்கலன்று காலை, கோயிலில் பொங்கல் வைத்து முடித்ததும் வீடுகளில் பொங்கல் வைக்கிறார்கள். ஒரு பெரிய பானையிலும், ஒரு சிறிய பானையிலும் பொங்கல் வைக்கின்றனர். நெற்கதிர், கண்ணுப்பிள்ளைப்பூவுடன் மாவிலை அல்லது ஆவாரம்பூவை பூச்செண்டு போலச் சுற்றி வீட்டு வாசலில் செருகிவைப்பார்கள். பானைகளுக்குப் பக்கத்தில் தாம்பாளத்தில் நெல் நிரப்பி, அதன் மேல் மஞ்சள் பிள்ளையாரை வைப்பார்கள். பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, குங்குமம் இடுவார்கள். பானையில் இருக்கும் தண்ணீர் பொங்கியதும் வீட்டில் இருக்கும் பெண்கள், சங்கு ஊதுவார்கள். பின் அரிசியை இட்டு பொங்கல் சமைக்கின்றனர். சங்கு முழக்கம் கேட்டால், பொங்கல் வைத்தாகிவிட்டது என்று பொருள். பொங்கல் பொங்கியதும் முறைகாரர்கள் வீடுகளில் ‘பொங்கல் பொங்கியாச்சா?’ என்று கேட்பது வழக்கம்.

16 காய்களுடன் கூட்டு

தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய பானையில் வெண் பொங்கலும், சிறிய பானையில் சர்க்கரைப் பொங்கலும் வைப்பார்கள். பொங்கல் வைப்பதற்காக புது மண்ணெடுத்து, வீட்டு வாசலில் சதுரமாகப் பூசுகிறார்கள். அதை, திட்டாணி என்கின்றனர். அந்தப் புதுமண்ணையே உருட்டிவைத்து, அதன் மீது பானைகளை வைத்துப் பொங்கலிடுகின்றனர். பொங்கல் படையலில் கரும்பு, வாழைப்பழம், தேங்காய், தயிர் ஆகியவையும் இடம்பெறும். 16 வகை காய்கறிகள், தானியங்கள் நிறைந்த கூட்டு வைப்பார்கள்.

உற்சாகம் ‘காணும்’ பொங்கல்

கடலூர் பகுதிகளில் பிற்பகலில்தான் பொங்கல் வைக்கும் கொண்டாட்டம் தொடங்குகிறது. காய்கறிக் குழம்பு வைத்து மாட்டுக்குப் படையலிடுகிறார்கள். அதுவும் பிற்பகலில்தான். காணும் பொங்கலன்று ஆண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பெண்கள், தாழம்பூவை வைத்து ஜடை பின்னி, ஊர்க்கோயில் பொது இடத்தில் ஒன்று கூடி, பாட்டுப் பாடி, கும்மியடித்து ஆடிப் பாடி மகிழ்கிறார்கள்.

ஒரு வாரம் ருசிக்கும் குழம்பு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீட்டு வாசலில் கிழக்குப் பார்த்த மாதிரி பொங்கல் வைப்பார்கள். சில பகுதிகளில் முறத்தை பசுஞ்சாணம் கொண்டு மெழுகி, அதில் பூசணி இலைகளை வைத்துப் படையலிடுவார்கள். அந்தந்தப் பகுதிகளில் விளையும்

காய்கறிகள், தானியங்களைக் கொண்டு சமைக்கப்படும் கொட்டைக் குழம்பு இங்கு பிரசித்தம். சுண்டச் சுண்ட குழம்பின் சுவை கூடும் என்பதால், ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடுகிறார்கள்.தெப்பக்குளம் தாண்டும் மாடு

மாட்டுப் பொங்கலன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் சுத்தி சுத்துவதென்று ஒரு வழக்கம். கோமியத்துடன் மடைத்தண்ணீர் சேர்த்து அதை மாவிலையால் வீடு முழுக்கத் தெளிக்கிறார்கள். வீட்டு வாசலில் சின்னதாகக் குழி பறிக்கின்றனர். அது தெப்பக்குளமாம். பொங்கல் வைத்த அடுப்பில் இருந்து எடுக்கும் கங்குகளை அதில் போடுகிறார்கள். கூடவே பட்டை மிளகாய், கல் உப்பு, மிளகும் போடுவார்கள். பிறகு கோமியத் தண்ணீரை இதில் ஊற்றுகின்றனர். மாலை வீடு திரும்பும்போது மாடு, கன்றுகள், இந்தத் தெப்பக்குளத்தைத் தாண்டி வீட்டுக்குள் நுழையும். இதனால் கால்நடைகள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x