Last Updated : 15 Jun, 2016 03:50 PM

 

Published : 15 Jun 2016 03:50 PM
Last Updated : 15 Jun 2016 03:50 PM

வாழ்வாதாரத்தை தேடி பெற்றோர் பயணம்: கவனிப்பாரற்று போன பாலி பள்ளி மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 51 மாணவ, மாணவியர் பயிலுகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் கடந்த 9-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு வந்த 4-ம் வகுப்பு மாணவர்கள் 13 பேர் சரியாக படிக்கவில்லை எனக் கூறி வகுப்பாசிரியை வைஜெயந்தி மாலா, மாணவர் களின் காலில் கற்பூரத்தை ஏற்றி சூடு வைத்துள்ளார். பெற்றோரின் புகாரால் ஆசிரியை வைஜெயந்திமாலாவும், தலைமையாசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆசிரியை மட்டும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான மாணவர்களின் நிலை குறித்து அறிய பாலி கிராமத்துக்குச் சென்ற போது, கிராம மக்கள் பேசவே அச்சப்பட்டனர்.

இக்கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வருமானத்துக்காக அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு சென்றிருக்கின்றனர். மேலும் பலர் தங்கள் குழந்தைகளை தாத்தா, மாமன் உள்ளிட்ட உறவினர்களின் பராமரிப்பில் விட்டு அண்டை மாநிலங்களில் பிழைப்பு நடத்தி வருவது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான புகழேந்தியின் தாயாரும், ஆசிரியையின் உறவினருமான வனிதா என்பவரிடம் பேசினோம். ‘‘எனது கணவர் சென்னையில் கூலி வேலை செய்கிறார். மாதம் ஒருமுறை வந்து செல்வார். எனது மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியை எனக்கும் உறவுதான். ஆனாலும் அவர் செய்த காரியம் எந்த தாயும் பொறுத்துக் கொள்ள முடியாதது. பிள்ளைகளை கண்டிப்பதில் தவறில்லை. அதற்காக சூடு வைப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என்கிறார்.

பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் இதுபற்றி பேச்சு கொடுத்தோம். பல திடுக்கிடும் சம்பவங்களை அவர்கள் கூறினர். (மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதற்காக அவர்களது பெயரைக் குறிப்பிடவில்லை).

‘‘சார் எங்க டீச்சர் லேட்டா தான் வருவாங்க, அடிக்கடி பேன் பார்க்க சொல்வாங்க'' என்றனர் கோரஸாக. இடையே குறுக்கிட்டு, ‘ஏன் சூடு வைச்சாங்க?' என்ற கேட்டதற்கு, ‘‘படிக்கலன்னு சூடு வச்சாங்க, அப்ப அனிதா அழுதுச்சு, அப்புறமா 2 பேர கூப்பிட்டு, கையையும், காலையும் பிடிச்சுக்க சொல்லி சூடத்தை ஏத்தி விட்டாங்க, அதுமாதிரி தான் புகழேந்தி, அரிகிருஷ்ணன், சுப்புலட்சுமின்னு எங்க எல்லாத்துக்கும் சூடு வைச்சாங்க, அனிதாவுக்கு தான் பெரிய புண்ணாயிடுச்சு. அதான் அது இன்னும் ஸ்கூலுக்கு வரல. போன வருஷமும் இது மாதிரி செஞ்சாங்க, ஆன அந்த அக்கா இப்ப இங்க இல்ல'' என்றனர்.

மிரட்சியோடு அந்த சிறார்கள் இந்த துயரத்தை விளக்கும் போதே நமக்கு கொடுமையாக இருந்தது.

இந்த சம்பவம் பற்றி பாலி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறும்போது, உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி, வேப்பூர், சங்கராபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் இல்லை. இங்குள்ள பலர் வாழ்வாதாரத்தை தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் பராமரிப்பில் தான் வளர்கின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் உறவினர்களின் பராமரிப்பில் உள்ளவர்கள். அவர்களுக்குத் தான் ஆசிரியை சூடு வைத்துள்ளார்'' என்றார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸிடம் கேட்டபோது, “மாணவர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு எவ்வித புகாரும் வரவில்லை. ஆசிரியையின் நடவடிக்கைகள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்.ஒரு ஆசிரியை தவறு செய்து விட்டார் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களையும் தவறாக மதிப்பிட முடியாது. மாணவ, மாணவியருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதோடு, மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அறிவுரை வழங்கியிருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x