Published : 22 Aug 2015 12:13 PM
Last Updated : 22 Aug 2015 12:13 PM

வால்பாறை காடுகளை அழிக்கும் அமெரிக்க தாவரம்: எச்சரிக்கை விடுக்கும் இயற்கை ஆர்வலர்கள்

‘மிக்கானியா மைக்ரந்தா...!’ (Mikaniamicrantha).. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது தடுக்கும் தன்மையுடையது. இந்த தாவரத்தினால் வால்பாறை காடுகளுக்கு பேரழிவுகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

பசுமை மாறாக்காடுகள் நிரம்பிய பகுதியாக விளங்கும் வால்பாறையை ஏழாவது சொர்க்கம் என்று வர்ணிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நீக்கமற பசுமை போர்த்தி, புல்வெளி சூழ் காடுகளை உள்ளடக்கியிருப்பதால் காண்பவர் கண்களை குளிரச் செய்கிறது. 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மீது பற்றிப் படர்ந்திருக்கும் பச்சைப் பசேல் கொடிகளை பார்க்கும்போது, அழகாகவே இருக்கும். ஆனால், அந்த அழகேதான் இங்கே ஆபத்து.

இந்த கொடித் தாவரம் ஒரே இரவில் 1 செ.மீ முதல் 5 செ.மீ வரை வளரக்கூடியது. பழமைமிக்க மரங்களை சூரிய ஒளி பட விடாமல் மறைத்துக்கொள்வதால், மரம் பட்டுப்போய் தானாக விழுந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய கொடிதான் இந்த ‘மிக்கானியா மைக்ரந்தா’ என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இந்தச் செடி, கோவை பொள்ளாச்சியில் ஆழியாறு தொடங்கி அட்டகட்டி, வால்பாறை, சோலையாறு, நீராறு, ஷேக்கல்முடி, ஹைபாரஸ்ட் என உள்ள காடுகளிலும் அகண்டு, நீண்டு வளர்ந்து கிடக்கிறது. உடனே இதனை களையெடுக்காவிட்டால் வால்பாறை காடுகளின் சோலைகளை அழித்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இதுகுறித்து வால்பாறையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிராங்க் பெஞ்சமின் கூறியதாவது:

‘இந்த செடியின் வளர்ச்சியை குறிக்கும் விதமாக, ‘ஒன் மினிட் ஒன் மைல்’ என்று வேடிக்கையாக ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட அபரிமித வளர்ச்சியுள்ள இச் செடியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்க காடுகள். 2-வது உலகப் போரின்போது நமது நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம், மேகாலயா பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் ஆயுத தளவாடங்கள் கொண்டுவரப்பட்டன. போர்க் காலங்களில் அடர்ந்த காடுகளில் கூட துருப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் விமான ஓடுபாதை, போர் விமானங்கள், போர்த் தளவாட குடோன்கள் போன்றவற்றை மறைக்கவே இந்த தாவர வகைகள் பயன்படுத்தப்பட்டன.

காலப்போக்கில் காடுகளில் உள்ள மரங்களில் பற்றிப்படர்ந்த இந்த செடி, மரங்கள் மீது சூரிய ஒளியை படாமல் செய்து, மரங்களை அழித்து வனங்களையே காணாமல் செய்ய ஆரம்பித்தது. அப்படிப்பட்ட தாவரம் வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தென்னிந்தியப் பகுதிகளுக்கும் வந்துவிட்டது. காடுகளுக்கும் இந்த தாவரத்துக்குமான பேராபத்தை உணர்ந்த கேரளா, கர்நாடகா போன்ற மாநில வனத் துறையினர், இதனை கண்டறிந்து அது முளைத்த பின் ஒரு செமீ முதல் ஒரு அங்குலம் வரை இடைவெளி விட்டு களை வெட்டி விடுகின்றனர். அதற்குப் பின்பு அவை வளராமல் பட்டுப் போய்விடுவதால் அங்கெல்லாம் இதன் தாக்கம் மிகுதியாக இல்லை.

இப் பணியை நமது வனத்துறையினர் செய்யாததால் வால்பாறை காடுகளில் இந்த தாவரமே மரங்களில் மிகுதியாக படர்ந்து காணப்படுகிறது. ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியாக விளங்கும் வால்பாறை காடுகளில் இச் செடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வால்பாறை காடுகள் திடீர் பேரழிவுகளை சந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகற்ற நிதி இல்லை: அதிகாரி

இந்த தாவரம் குறித்தும், அவற்றை அகற்றும் நடவடிக்கை குறித்தும் வால்பாறை வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த வகை தாவரங்கள் வால்பாறை நகராட்சிப் பகுதியில்தான் அதிகமாக உள்ளன. அதை அகற்ற நகராட்சி அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை காடுகளில் இது அதிகம் இல்லை. அதை அகற்ற எங்களுக்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x