Published : 15 Dec 2016 08:26 AM
Last Updated : 15 Dec 2016 08:26 AM

‘வார்தா’ புயலால் குலுங்கிய மின்சார ரயில்: உயிரை கையில் பிடித்திருந்த அந்த 7 மணி நேரம்

‘வார்தா’ புயல் சென்னையை நெருங்குகிறது என்று வானிலை ஆய்வு மையமும், அரசும் அறிவுறுத்திக் கொண்டிருந்தன. அன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று பொத்தேரி ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளைக் ஏற்றிக்கொண்டு காலை 11 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தது. அந்த ரயில், சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கடற்கரை நோக்கி எப்போது புறப்படும் என்று அதில் இருந்த பயணிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். புயல் காரணமாக ரயில் மீண்டும் செங்கல்பட்டுக்கு செல்வதாகவும் திடீரென அறிவிப்பு வெளியானது.

‘வார்தா’ புயலின் தாக்கம் அதிக மானதால் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் செய்தி பயணிகளைப் பரபரப்பாக்கியது. சென்னையில் வேலைக்குப் போக முடியாத நிலையில் வீடு திரும்ப ஆயத்தமாக இருந்தார்கள். ரயில் வண்டலூர் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கிருந்து ஒரு நிமிடத்தில் புறப்பட வேண்டிய ரயில் புறப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது. அப்போது நேரம் 11.30 மணி. ரயில் புறப்படும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று ரயில் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் 7 மணி நேரம் ரயிலுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கப் போகிறோம் என்று யாருக்குமே தெரியாது.

ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் புயலும் கோரத்தாண்டவத்தை தொடங்கியது. சூறைக்காற்றும், கொட்டும் மழையும் பயணிகளை குலைநடுங்கச் செய்தன. பேய்க் காற்று ரயிலையே குலுக்கியது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுங்கியபடி பயணிகள் செய்வதறியாது தவித்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பீதியில் இருந்தனர். மரக்கிளைகளும், விளம்பரப் பலகைகளும் காற்றில் பறப்பதைப் பார்த்து அச்சத்தில் உறைந்தனர் பயணிகள். செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தமது பரிதாப நிலையை குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்தனர். ரயிலைவிட்டு இறங்கிச் செல்லவும் அச்சம். அப்படியே இறங்கிப் போனால் மாற்று ஏற் பாட்டுக்கும் வழியில்லை. வேறு வழியில்லாமல் ரயிலில் இருந்தாக வேண்டிய கட்டாயம்.

புயலால் ரயிலில் மாட்டிக் கொண்ட பயணிகளுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. பசியை ஆற்றிக் கொள்ள உணவும் கிடையாது. இந்த துயரம் 7 மணி நேரம் நீடித்தது. புயலின் வேகம் சற்று குறைந்த நிலையில் ரயிலை விட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குப் புறப்பட்டனர் பயணிகள். அப்போது மாலை 6 மணியை தாண்டிவிட்டது. இருட்டிவிட்ட நிலையில், மின் விளக்குகள் எரியாததால் சாலையில் இருட்டில் நடக்க நேரிட்டது.

பஸ், ஆட்டோ என எந்த போக்கு வரத்தும் இல்லாத நிலையில், சிலருக்கு டூவீலரில் லிப்ட் கிடைத்தது. அவ்வாறு லிப்ட் கிடைக்காதவர்கள் நடையைத் தவிர வேறு வழியில்லை என்று நடக்கத் தொடங்கினர். போகும் வழியில், ஆங்காங்கே காற்றில் வேகமாகப் பறந்துவரும் விளம்பர பலகை தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதியிலே நடந்தனர். சாலையில் முறிந்து கிடக்கும் மரக்கிளைகளும் கண்ணில் படவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில் எது நடந்தாலும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்று சிலர் திடீர் நண்பர்களாகக்கூட மாறிவிட்டனர். வீட்டுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்த பிறகு தகவல் கொடுங்கள் என்று அக்கறை கலந்த அன்போடு கூறிச் சென்றனர். ஆனால், வீட்டில் மின்தடை, செல்போனில் சார்ஜ் இல்லை, அப்படியே இருந்தாலும் நெட்வொர்க் பிரச்சினை-இவற்றின் காரணமாக யாரும் யாரிடமும் தகவல் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வேதனையை குடும்பத்தினரிடம் சொல்லி ஆறுதல் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x