Published : 29 May 2016 09:24 AM
Last Updated : 29 May 2016 09:24 AM

வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? - ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு குரல்களும்

விதிமுறைகளை மீறியும், நீதித் துறையின் மாண்புக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்படும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இதுவரை பார் கவுன்சிலுக்கு மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த அதிகாரம் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் விதிமுறைகளில் உயர் நீதிமன்றம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கே.சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)

வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது.

டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள் ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.

ஆர்.காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

அனைத்து நீதிமன்றங் களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர் களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக் கறிஞர்களை மிரட்டுவது போலா கும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர் கள் கடுமையாக வாதிட வேண்டி யிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதி களில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

பி.வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)

வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி னாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங் கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.

ஆர்.சி.பால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்)

வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x