Published : 11 Aug 2014 07:00 PM
Last Updated : 11 Aug 2014 07:00 PM

வறட்சியால் தவிக்கும் கிராமத்தினருக்கு ஊராட்சித் தலைவர் உதவி: தனது தோட்டத்திலிருந்து தண்ணீர் விநியோகம்

கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிராம மக்களுக்கு தனது தோட்டத்தில் இருந்து சொந்த செலவில் குழாய்கள் பதித்து ஊராட்சிமன்ற தலைவர் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்.

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றித்துக்குட்பட்ட சிங்கராஜபுரம், துரைச்சாமிபுரம், உப்புத்துறை, திம்மராஜபுரம், மஞ்சனூர்த்து ஆகிய கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி விவசாயத் தொழில் நசிந்துள்ளது. பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் வற்றி விட்டன.

வைகை ஆற்றின் நடுவில் போடப் பட்டுள்ள உறை கிணறுகளிலும் நீரில்லை. இதனால் குடிநீரை தேடி பல கி.மீட்டர் தூரம் கரடுமுரடான பாதைகளை கடந்து கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க உள்ளாட்சித்துறை நிர்வாகத்தை எதிர்பார்க்காமல், துரைச்சாமிபுரம் ஊராட் சித் தலைவர் செல்லபாண்டியன் என்பவர், தனது தோட்ட கிணற்றில் இருந்து குழாய்கள் பதித்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் ஊராட்சித் தலைவர் செல்லபாண்டியன் கூறியது: இப்பகுதியில் மழையில்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் மோசமான பாதைகளை கடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன்.

ஆனால், எந்த பயனும் இல்லை, இதனால் கடந்த 4 நாள்களுக்கு முன், சுமார் ஒரு கி.மீட்டார் தூரத்தில் உள்ள எனது தோட்டத்து கிணற்றில் இருந்து சொந்த பணத்தில் ரூ.60,000-ம் செலவழித்து குழாய்கள் பதித்து துரைச்சாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாயில் இணைத்துள்ளேன். இதன் மூலம் தினமும் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் கிடைத்துள்ளதால், எனது கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x