Published : 20 May 2016 07:01 PM
Last Updated : 20 May 2016 07:01 PM

வருங்காலத்திலும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி உறுதி

வருங்காலத்திலும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இன்று அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது:

''நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5.3 சதவீதம் அதாவது 23 லட்சத்து 775 வாக்குகளைப் பெற்றுள்ளோம். வன்னியர் சமுதாயத்தினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் எங்களுக்கு வாக்களித்துள்னர். வட தமிழகம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் அதிமுக, திமுகவினரின் பணபலத்தையும் மீறி பாமகவுக்கு இந்த அளவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக என்பது சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட இயக்கம். நாங்கள் அரசியலை சேவையாகவே செய்து வருகிறோம். அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக்கி விட்டன. பணபலத்தால் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தேர்தலை எதிர்கொண்ட பாமக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் பாமகவுக்கு பிரதிநித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால், தேர்தலில் வென்றால்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்பதில்லை. கடந்த தேர்தலில் திமுக, தேமுதிகவை விட பாமகவே சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டது. ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஒரு தேர்தலோடு எல்லாம் முடிந்து விடாது. முன்பை விட வேகமாக எங்கள் பணியைத் தொடர்வோம். ஆனால், பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தம் அளிக்கிறது.

இந்த தேர்தல் தோல்வி மூலம் அதிமுக, திமுகவுக்கு மாற்று அரசியல் முடிந்து விட்டது என்று சிலர் கூறுவதை ஏற்க முடியாது. வருங்காலங்களிலும் அதிமுக, திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காது.

வெற்றி பெற்றுள்ள அதிமுக, திமுகவினருக்கு வாழ்த்துக்கள். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்தது தான் அவரது சாதனையாக இருந்தது. இந்த முறை அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்று அன்புமணி கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x