Published : 13 Feb 2017 09:18 PM
Last Updated : 13 Feb 2017 09:18 PM

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூவத்தூரில் தங்க வந்தேன்: சசிகலா

ஏம்.எல்.ஏக்கள் அடைக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூவத்தூரில் தங்க வந்துள்ளேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சசிகலா இன்று பேசியதாவது:

அதிமுக தொண்டர்களின் வேகத்தை யாரும் கணக்கிட முடியாது. அது புயல் மாதிரி இருக்கும்.

இங்குள்ளவர்களை அடைத்து வைத்திருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகின்றனர். இதென்ன மிருகமாக அடைத்து வைப்பதற்கு. இங்குள்ளவர்களின் முகத்தில் சந்தோஷம் இருக்கிறது. ஒற்றுமையாக குடும்பமாக இருக்கிறோம். எம்.எல்.ஏக்களை காணவில்லை என நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கின்றனர். ஏதோ தவறான காரியத்தை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இங்கே இருக்கிற மாவட்ட ஆட்சி தலைவருக்கும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் நானும் இங்கே வந்து தங்கிவிடுவோம் என்று நினைத்தேன். வாங்க நல்ல படியாக பார்த்துட்டுப் போங்க. அப்போதுதான் எல்லோரையும் சேர்த்து பார்க்க முடியும்.

நான் என்னுடைய துணிகளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நாளைக்கு எல்லோரும் சேர்ந்து கோட்டைக்கு போகலாம். நம்முடைய ஆட்சி. நாம் ரொம்ப அமைதியாக செயல்படனும். மக்களிடம் கெட்டப் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

மீதியுள்ள நான்கரை ஆண்டுகளை நடத்தப்போவது நாம் தான். நாம் தானே மக்களை பார்க்க வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு அந்த வேலை இல்லையே. அதனால் தான் அவர் உருட்டி மிரட்டிட்டு இருக்கிறார். ஒவ்வொரு எம்எல்ஏ வீட்டுக்கு போய் உறவினர்களை பார்த்து ஒழுங்கு மரியாதையாக வந்துவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டுப் பெண்களை தூக்கிட்டு போய்விடுவோம் என்று மிரட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு. முதல்வர் ஆகவேண்டும் என்ற ஒரே கனவை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் மிரட்டிட்டு இருந்தா எப்படி?

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வராக இருக்க தகுதி இல்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் இடத்தில் இருந்துக் கொண்டு நாமே போய் ஆட்களை விட்டு மிரட்டினா எப்படி. இது கண்டிக்கத்தக்கது. நம்முடைய அரசாங்கம். யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது. அமைதியாக வழியில் நடக்கணும் என்று சொல்லியிருக்கிறேன். நாளைக்கு நாம் இங்கிருந்து போகும் போது சந்தோஷமா தான் போகப்போகிறோம். நல்லபடியா போய் ஆட்சியை நடத்தப்போகிறோம்.

ஜெயலலிதா அனைத்து இடங்களிலும் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். மக்களின் பசி தீர்த்த தலைவர்களின் வழியில் நாம் வந்திருக்கிறோம். தர்மம் நிச்சயம் தலைகாக்கும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே சென்று தீர்த்து வைக்க வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை நாம் எல்லோரும் உயிர் உள்ளவரை ஒன்றுமையாக இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடம் அதியசம் மிக்க வகையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று சசிகலா பேசினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x