Published : 27 Mar 2015 09:57 AM
Last Updated : 27 Mar 2015 09:57 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் செந்நாய் 3 குட்டிகளை ஈன்றது

அழிந்து வரும் விலங்கினமாக அறிவிக்கப்பட்டுள்ள செந்நாய் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இப்பூங்காவில் பிரபாவதி என்ற பெண் செந்நாய் அண்மையில் 2 ஆண், 1 பெண் என மொத்தம் 3 குட்டிகளை ஈன்றது. இக்குட்டிகளின் தந்தை இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சந்திரன்.

செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்தவை. இவை இந்தியா, திபெத், பூட்டான், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. இவை குடும்பமாக வாழக்கூடியவை. குழுவாக சென்று வேட்டையாடும். ஒவ்வொரு குடும்பத்திலும் 5 முதல் 12 நாய்கள் இருக்கும். பாறை இடுக்குகள், அடர்ந்த புதர்களில் வசிக்கக்கூடியவை. ஆண்டுக்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். 63 நாட்கள் வரை இதன் கர்ப்ப காலம் இருக்கும். ஒரே நேரத்தில் 6 குட்டிகள் வரை ஈனும். 2 மாதங்கள் வரை பால் குடிக்கும். 6 மாதங்களுக்கு பிறகு வேட்டையில் ஈடுபடும். மான், முயல், எலி போன்றவற்றை உண்ணும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x