Published : 22 Dec 2016 08:32 AM
Last Updated : 22 Dec 2016 08:32 AM

ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர்

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக் கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளனர்.

ஒரேயொரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெறுவதற்கு பொதுமக்கள் கால்கடுக்க, நாள் முழுவதும் வங்கிகள், ஏடிஎம்கள் முன்பு காத்திருக்கின்றனர். ஆனால், ஒருசிலர் மட்டும் கோடி கோடியாக புதிய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ டிஎஸ்பி சோமையா, ஆய்வாளர் நாகேஸ்வரன் ஆகியோர் சேகர் ரெட்டி உட்பட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் 3 பேரும் முறைகேடாக பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணியளவில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரேம் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி இருவரையும் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தில் உள்ள சிபிஐ முதன்மை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜனவரி 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜி.விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர்.

ஜாமீன் மனு தாக்கல்

சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகி யோர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ வழக்கறிஞர்கள் என்.நாகேந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (23-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் இருவரையும் 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 நாட்களில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறு வதற்கு வங்கி அதிகாரிகள் உதவி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x