Last Updated : 05 Sep, 2016 10:04 AM

 

Published : 05 Sep 2016 10:04 AM
Last Updated : 05 Sep 2016 10:04 AM

ராமேசுவரத்தில் ‘ஏலே லம்பா ஏலே’ நாட்டுப்புற பாடலுடன் பாரம்பரிய ஓலை வலை மீன்பிடி முறையை பாதுகாக்கும் பெண்கள்

நாட்டுப்புறப் பாடலை பாடியவாறு மீன் பிடிக்கும் பாரம்பரிய ஓலை வலை மீன்பிடி முறையை ராமேசுவரம் தீவில் மீனவப் பெண்கள் பாதுகாத்து வருகின்றனர்.

ராமேசுவரம் தீவில் மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல் பகுதியில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பதப்படுத்தப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் இருந்து விடுபட்டு, செயற்கையான முறையில் கோல் இழுவலை, அடிமட்ட பலகை இழுவலை, மிதவை இழுவலை, சூழ்வலை, சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடந்த ஒரு தலைமுறையாக மீன் பிடித்ததால் மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல்களின் சூழலியல் மண்டலம் பாதிக்கப்பட்டு கடல் வளமும் அழிந்து வருகிறது.

இந்நிலையில், கடல் சூழலியல் மண்டலத்தைப் பாதிக்காமல் ஓலை வலை மூலம் மீன் பிடிக்கும் முறையை, ராமேசுவரம் தீவு மீனவப் பெண்கள் இன்னமும் உயிர்ப்புடன் பின்பற்றி வருகின்றனர். ராமேசு வரம் அக்னிதீர்த்தக் கடற்கரை யில் ஓலை வலை இழுக்கும் மீனவப் பெண்களைச் சந்திக்கச் சென்றபோது, ‘சாந்து அரைக்கும் போது ஏலே லம்பா ஏலே, தன்னே நோக்கிப் பாத்த மாமா ஏலே லம்பா ஏலே, முன்னே நின்னு பாத்த மாமா, ஏலே லம்பா ஏலே, தலைய வகுரும்போது ஏலே லம்பா ஏலே, தன் அழகை பாத்த மாமா ஏலே லம்பா ஏலே, முடிய வகுரும்போது ஏலே லம்பா ஏலே, தன்னானே சொல்லி வாரேன் ஏலே லம்பா ஏலே’ என்று கழுத்தளவு கடல் நீரில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த 3 பெண்கள் அலுப்பு தீர பாடிக்கொண்டு இருந்த கடற்புற பாட்டு நம்மை வரவேற்றது.

‘இந்த நீராகாரத்தை முதல்ல குடிங்க... அப்புறமா பேசுவோம்’ என உபசரித்துவிட்டு, ஓலை வலை மீன்பிடி முறையைப் பற்றி பேச ஆரம்பித்தார் ராமேசுவரம் கரையூர் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் நாகூரம்மா. அவர் கூறியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஓலை வலை மீன்பிடி முறை முதன்மையானது. இந்த முறையை ராமேசுவரத்திலும், இலங்கையில் பாரம்பரிய தமிழ் மீனவர்களும் பின்பற்றி வருகின் றனர். கடலில் கழுத்தளவு ஆழத்தில் ஆங்கில ‘யு’ வடிவில் (U) ஓலை வலையை அமைப்போம். பின்னர், வலையின் இரு புறமும் கயிற்றில் பனை ஓலைகளைக் கட்டி 2 குழுக் களாக நின்று இழுத்துச் செல் வோம்.

முடிவில் ஆங்கில ‘ஓ’ வடிவில் (O) வலையை கடலில் இணைத்து வலையில் சிக்கிய மீன்களை சேகரிப்போம். குறைந்தபட்சம் இந்த வலையை இழுக்க 3 பேர் தேவை. பெண்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கயிற்றின் நீளமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்தப் பனை ஓலை மீன்பிடி முறைக்கு அதிக முதலீடு தேவை யில்லை. இதனால் கடல் வளத் துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

ஓலை வலை மீன்பிடி முறையில் கூலி முறையைப் பின்பற்றுவது கிடையாது. பிடிக்கிற மீன்களை, எத்தனை பெண்கள் வலைகளை இழுக்கிறோமோ அவற்றை சம பங்குகளாக பங்கிட்டுக்கொள்வோம். இதனால் எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி பேதம் கிடையாது.

மிகவும் பழமையான மீன்பிடி முறையாக இருப்பதாலும், மீனவ சமுதாய நாட்டுப்புற பாடல்களைக் கேட்பதற்கும் ராமேசுவரம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x