Published : 06 Nov 2016 02:24 PM
Last Updated : 06 Nov 2016 02:24 PM

ராமநாதபுரம் அருகே 13-ம் நூற்றாண்டு சுடுமண் சிற்பங்கள்: மண்ணில் புதையுண்ட கோயில்களை அகழாய்வு செய்ய கோரிக்கை

ராமநாதபுரம் அருகே நரிப்பையூரில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்களை கண்டுபிடித்துள்ள தொல்லியல் ஆர்வலர்கள், அதன் அருகே புதைந்த நிலையில் உள்ள 2 சிவன் கோயில்களை அகழாய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், சாயல்குடி அருகில் உள்ள தெற்கு நரிப்பையூர் கடற்கரையிலும், அதன் அருகே வெட்டுக்காடு பகுதியில் ஒன்றும் என 2 சிவன் கோயில்கள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளதை ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் காளிமுத்து ஆகியோர் கள ஆய்வில்கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து நரிப்பையூரில் வே.ராஜகுரு நேற்று கூறியதாவது:

மீன் பிடித்து கரைக்கு கொண்டுவரும் பகுதியை பாடு என்பர். நரிப்பையூர் ஊராட்சி தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் துரைப்பாடு, சொக்கன்பாடு, எருக்கலாம்பாடு, பள்ளிவாசல் பாடு ஆகிய பாடுகள் உள்ளன. துரைப்பாடு பகுதியில் போர்ச்சுகீசியர் கால தேவாலயம் இருந்து, அது தற்போது புதிதாக மாற்றிக்கட்டப்பட்டுள்ளது. எருக்கஞ்செடிகள் அதிகமாகக் காணப்பட்ட பகுதி எருக்கலாம்பாடு. பள்ளிவாசல் பாடு பகுதியில் ஒரு தர்ஹா உள்ளது. எனவே சொக்கன் பாடு பகுதியில் சொக்கநாதர் கோயில் இருந்ததா என கள ஆய்வு செய்தோம். சொக்கன்பாடு பகுதியில் இருந்த ஒரு தோப்பை ஆய்வு செய்தபோது, கொடுங்கை ஒன்றும், சில தூண்களும் மண்ணில் புதைந்த நிலையில் இருந்தன.

செயற்கைக் கோள் வரைபடத்தில் இப்பகுதியைப் பார்த்தபோது ‘எல்’ வடிவத்தில் உள்ள பகுதியில் மட்டும் தென்னை மரங்கள் வளரவில்லை. அப்பகுதியில் தென்னை மரம் நட குழி தோண்டியபோது கற்கள் பெயர்ந்து வந்துள்ளன. இதன் மூலம் அங்கு ஒரு கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

நரிப்பையூரில் அருகே வெட்டுக்காடு என்ற இடத்தில் திறந்த வெளியில் அமர்ந்த நிலையிலான 8 கைகளையுடைய காளி சிற்பம் உள்ளது. இதை பிழை பொறுத்தம்மன் என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இங்கு கள ஆய்வு செய்தபோது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 சுடுமண் சிற்பங்கள் கிடைத்தன.

இதன் அருகில் சாலையின் எதிரே உள்ள உடை மரத்தின் கீழ் ஒரு நந்தி மட்டும் உள்ளது. இப்பகுதி மக்களால் இது கோயிலாக வணங்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் 2007-ல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட குழி தோண்டியபோது அம்மன், முருகன், பைரவர் சிலைகள் கிடைத்துள்ளன. அவை தற்போது ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இச்சிலைகள் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

சாயல்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது திருமாலுகந்தான்கோட்டை. இங்கு கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் கல்வெட்டுகளில் இடைவழி என்ற எறிவீரபட்டினம் எனும் ஊரின் சிவன் கோயில் குறிக்கப்படுகிறது. அது வெட்டுக்காடு பகுதியில் உள்ள சிவன் கோயிலாக இருக்கலாம். எனவே மண்ணில் புதைந்த நிலையில் உள்ள இந்த சிவன் கோயிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும்.

அகழாய்வுகள் மூலம் இக்கோயில்களை வெளிப்படுத்தப்படும்போது பாண்டியர் கால வணிகம், ஆட்சி முறை, சமயம் போன்ற தகவல்கள் கிடைக்கலாம். தமிழக தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுத்து இவற்றை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x