Published : 16 Sep 2015 08:13 AM
Last Updated : 16 Sep 2015 08:13 AM

ரசாயன விநாயகர் சிலைகளால் மாசடையும் நீர்நிலைகள்

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படு வதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன, இதேபோல ரசாயன சிலைகளால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் வரும் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையின் சின்ன சின்ன சந்துகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுவது வாடிக்கை. 11 நாட்கள் திருவிழாவுக்குப் பிறகு அனைத்து விநாயகர் சிலைகளும் கடல், நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

ரசாயன சிலைகள்

பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாக்களில் நிறுவப்படும் பெரும் பாலான சிலைகளில் கால்சியம் சல்பேட் ஹெமிஹைடிரேட் எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்டர் ரசாயன பூச்சு உள்ளது. நச்சுத்தன்மை கொண்ட அந்த ரசாயன சிலைகள் கடல், ஏரிகளில் கரைக்கப்படும்போது அவை நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கை விளைவிக்கின்றன. நீர்நிலைகளில் ரசாயன கலவைகள் கரைய பல மாதங்கள், ஏன் சில ஆண்டுகள் கூட ஆகலாம்.

ரசாயன பாதிப்பு நீர்நிலை களோடு நிறைவடைவது இல்லை. கடல், ஏரிகளில் மிதக்கும் ரசாயன கழிவுகளை தின்னும் மீன்கள் சந்தைக்கு வருகின்றன. அதன்மூலம் மனிதர்களின் உடலிலும் மறைமுகமாக ரசாயனம் சேருகிறது. பொதுவாக விநாயகர் சிலைகளுடன் அலங்கார ஆடைகள், பிளாஸ்டிக் ஆபர ணங்களும் நீர்நிலைகளில் மிதக்க விடப்படுகின்றன. இதனால் அந்த நீர்நிலைகள் மிதக்கும் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றன.

ஹைதராபாதின் ஹூசைன்சாகர் ஏரியில் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஏரியில் அபாயகரமான ஆர்செனிக், மெர்குரி ரசாயனங்கள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல நாடு முழுவதும் இதேநிலை காணப்படுகிறது.

எதிர்வரும் பேராபத்தை தடுக்க பருவநிலை மாறுமாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை குறித்து மக்களிடம் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத இயற்கையான முறையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புணேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்மாதிரி முயற்சியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகளை வடிவமைத்து மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த அமைப்பு, களிமண்ணில் சிலைகளை வடிமைக்கிறது. அவற்றை நெருப்பில் சுடுவதில்லை, சூரியஒளியில் மட்டுமே காயவைக்கின்றனர். மேலும் ரசாயன பூச்சுக்கு பதிலாக காய்கனிகளில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை வர்ணங்களை பூசுகின்றனர்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடு முழுவதும் இயற்கைக்கு மாற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதன்படி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை அறவே தவிர்க்க வேண்டும். எந்தவொரு சிலையிலும் ரசாயன வர்ண பூச்சை அனுமதிக்கக்கூடாது.

வெறும் களிமண்ணில் மட்டுமே சிலைகளை வடிவமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஆபரணங் கள், அலங்கார பொருட்களை தவிர்க்கலாம்.

இலை விநாயகர், வேர்க் கடலை விநாயகர், காகித விநாயகர், தேங்காய் விநாயகர் என இயற்கையோடு இணைந்த சிலைகளை வடிவமைக்கலாம். இந்த வகையில் பூமிக்கும் கடலுக்கும் தீங்கு விளை விக்காமல் விநாயகர் சதுர்த் தியை விழிப்புணர்வோடு கொண்டா டலாம்.

* மும்பையில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான சிலைகளில் நச்சுத்தன்மைவாய்ந்த ரசாயன கலவைகள் பூசப்பட்டுள்ளன.

* சுற்றுச்சூழலைப் பாதுகாக்க களிமண்ணில் மட்டுமே விநாயகர் சிலைகளை வடிவமைக்க வேண்டும். அதில் காய்கனிகளில் இருந்து எடுக்கப்பட்ட வர்ணங்களைப் பூசலாம். சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் முன்பு ஆபரணப் பொருட்கள் அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x