Published : 13 May 2016 06:43 PM
Last Updated : 13 May 2016 06:43 PM

மூன்று கட்சிகள் பணம் கொடுக்க முன்வந்தன: இணையதள பேட்டியில் விஜயகாந்த் தகவல்

"எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக பாஜக, அதிமுக, திமுக கட்சிகள் முன்வந்தன. ஆனால், நான் போகவில்லை. தேர்தலுக்குப் பிறகும் உறுதியாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு செல்ல மாட்டேன்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

'தி நியூஸ் மினிட்' ஆங்கில செய்தி இணையதளத்துக்கு அவர் வீடியோ பேட்டி அளித்துள்ளார். (இணைப்பு கீழே)

அதில், தேமுதிகவின் கொள்கைகள் தெளிவாக இல்லை என்று இதர கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, "அவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டேன். நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். ஊழலையும், வறுமையையும் ஒழிப்பது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் அமைத்துக் கொடுப்பது. இவைதான் தேமுதிகவின் கொள்கை. இவற்றை என்னைத் தவிர யார் கொடுக்கப் போகிறார்கள்" என்றார்.

மூன்று முறை தொகுதிகள் மாற்றி போட்டியிடுவது தவறு அல்ல என்ற அவர், "மாற்றுவதால் என்ன தப்பு? கிராமங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டியிட வேண்டியதுதான். இப்போதும் விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் மக்கள் அந்த தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வருடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் எங்கும் 5 பைசா கூட ஊழல் செய்யவில்லை. கொள்ளையடிக்கவில்லை. அதனால் எந்த தொகுதியிலும் நிற்கலாம்" என்றார்.

முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதால்தான் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தீர்களா? என்றதற்கு, "நான் தெரியாமல் தான் கேட்கிறேன். முதல்வர் வேட்பாளர் என்பதை மறந்துவிடுங்கள். திமுகவுடன் அல்லது அதிமுகவுடன் நான் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நாட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளுன் கூட்டணி வைக்க நான் போகவே மாட்டேன். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மூன்று மாதங்களுக்குள்ளாகவே வெளியே வந்துவிட்டேன்.

எவ்வளவு காசு பணம் வேண்டுமானாலும் தருவதாக பாஜக, அதிமுக, திமுக கட்சிகள் கூறின. ஆனால், நான் போகவில்லை. முதல்வர் வேட்பாளராக என்னை முன்னிறுத்தாவிட்டாலும் மக்கள் நலக் கூட்டணியில்தான் இணைந்திருப்பேன். பாஜகவில் கூட என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், நான் அங்கும் போகவில்லை. ஊழல் செய்யாத மக்கள் நலக் கூட்டணிதான் எனக்கு தேவை" என்றார்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் சூழல் அமைந்தால் திமுக அல்லது அதிமுகவுடன் இணைவீர்களா? என்று கேட்டதற்கு, "போகவே மாட்டேன். இது உறுதி. ஏன் தொங்கு சட்டசபை உருவாகும் என்று நினைக்கிறீர்கள். மக்கள் சரியாக தங்கள் முடிவை வாக்குகளாக அளிப்பார்கள். தேர்தல் முடிவை அறிவிக்கும் 19-ம் தேதி பார்த்துவிட்டுதான் இதை நீங்கள் பேச வேண்டும்" என்றார் விஜயகாந்த்.

கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்தவர், "19-ம் தேதி பாருங்கள். சும்மா ஜெயலலிதா, கருணாநிதி மட்டும் தான் சட்டசபையில் அமர வேண்டுமா? மதுவிலக்குதான் முதல் கையெழுத்து என்று கருணாநிதி சொல்லி வந்தார். ஆனால், திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகவின் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டுக்கு கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு கடன் சுமையில் இருந்து விவசாயி கள் மீள வழி செய்வோம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். கருணாநிதியை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதையாகிவிடும்" என்றார்.

உடல்நலப் பிரச்சினை பற்றியும், இணைய கலாய்ப்பு குறித்துமான கேள்வியை எதிர்கொண்டவர், "நான் அதைப்பற்றி எதுவும் நினைப்பதில்லை. நான் இப்போது கூட உங்களிடம் நன்றாகத் தானே பேசிக்கொண்டிருக்கிறேன். உடல் நலப் பிரச்சினை என்றால் முழுமையாக பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்ல முடியுமா? இதே கேள்வியை உங்களால் ஜெயலலிதாவிடமோ, கருணாநிதியிடமோ கேட்க முடியாது. என்னைப் பார்ப்பதால் தான் என்னிடம் உங்களால் இப்படி கேட்க முடிகிறது" என்றார்.

மேலும், "இலவசங்களை வழங்குவது என்பது ஹம்பக் அரசாங்கம். தான் ஜெயிக்க வேண்டும். ஜெயித்த பிறகு மக்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைப்பதே ஜெயலலிதாவின் அரசாங்கம்" என்று அந்தப் பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் பேட்டியின் வீடியோ வடிவம்: