Published : 04 Nov 2016 08:28 AM
Last Updated : 04 Nov 2016 08:28 AM

முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்: சூரன் உருவங்களை பல தலைமுறையாக வடிவமைக்கும் குடும்பத்தினர்

முருகப்பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் சூரன்களின் உருவங்களை வடி வமைக்கும் பணியில் தலைமுறை தலைமுறையாக பழநியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய திரு விழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்று. சுவாமிக்கு காப்பு கட்டும் நாளில் பக்தர்களும் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கிவிடுவார்கள். 7 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஆறாம் நாளான நவ.5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியே சூரசம்ஹாரம் என அழைக்கப்படுகிறது.

பழநி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்க முகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்னக் குமாரர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி வதம் செய்யும் அசுரர் (சூரன்) வடிவங்களை ஆண்டாண்டு காலமாக பல தலை முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

அப்பணியில் ஈடுபடும் பழநியைச் சேர்ந்த ஏ.ஆர்.செல்வ ராஜ் கூறியதாவது:

பல தலைமுறையாக சூரன் உருவங்களை வடிவமைக்கும் பணியில் எங்கள் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறோம். நான் சிறுவயது முதல் என் தந்தையார் செய்வதைப் பார்த்து வந்தேன். அவருக்குப் பிறகு எனது தலைமையில் எங்கள் குடும்பத் தினர் செய்துவருகிறோம். வெளி ஆள்களை வேலைக்கு அழைத்து இந்தப் பணியை செய்வதில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு மட்டுமே செய்கிறோம். குடும்பத்தில் உள்ளவர்கள் வெளி யூர்களில் வேலை பார்த்து வந்தாலும் கந்தசஷ்டி விழாவின் போது இங்கு வந்துவிடுவார்கள்.

தாரகாசூரன், பானுகோபன் சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் என 4 அசுரர்களையும் வெவ்வேறு வடிவங்களில் அமைப்போம். இதை வடிவமைத்துக் கொடுப்பதுடன் எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று பழநியில் நான்கு கிரி வீதிகளிலும் நான்கு சூரர்கள் நிறுத்தப்பட்டு சின்னக்குமாரர் வதம் செய்யும்போதும் சூரன்களைத் தூக்கிவரும் சப்பரத்தின் மேல் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். எங்களுக்குக் கிடைத்த பாரம்பரிய உரிமையை விட்டுவிடாமல், சுவாமிக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாக இப்பணியை கருதி செய்துவருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x