Published : 03 Nov 2016 10:23 AM
Last Updated : 03 Nov 2016 10:23 AM

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் அமர முடியாத நிலையிலும் அயராத உழைப்பு: மாற்றுத்திறனாளியின் வியக்க வைக்கும் தன்னம்பிக்கை

தொடர்ச்சியாக சில நிமிடங்கள் ஓர் இடத்தில் அமர முடியாத அளவுக்கு உடல் பலவீனமாக உள்ள நிலையிலும், தானே ஆட்டோ ஓட்டிச் சென்று, கடையைத் திறந்து சொந்த உழைப்பில் வாழ்ந்து வருவதோடு, தன் போன்றவர்கள் வெளிஉலகுக்கு வருவதற்கும் தூண்டுதலாக இருந்து வருகிறார் முதுகுத்தண்டுவடம் பாதிப்புக் கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி அருகே உள்ள வீர நாராயணமங்கலத்தைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம்(33). முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவரது வாழ்வு, வீல்சேரில்தான் நடக்கிறது. பள்ளிப் படிப்பை தாண் டாதவர், தனது இடைவிடாத முயற்சியால் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையை விதைத்து வருகிறார்.

பொதுவாக முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள். அவர்கள் வெளி உலகுக்கு அதிகம் வருவது இல்லை. காரணம், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு இயற்கை உபாதைகளும் அவர்களது கட்டுப் பாட்டில் இருப்பது இல்லை. இவைகளுக்கு மத்தியில்தான் வீல்சேரில் வந்து, ஆட்டோவில் ஏறுகிறார் வள்ளிநாயகம்.

6 வருட வேதனை

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது தந்தைக்கு விவசாய கூலி வேலை. எனக்கு 2 தம்பிகள் உள்ளனர். வீட்டில் ரொம்ப கஷ்டமான காலம் அது. நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது, பக்கத்தில் ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலைக்குச் சென்றேன். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டேன். கிட்டத் தட்ட 6 வருடம் மரண வேதனை தான். படிப்பும் அதோட நின்னுப் போச்சு.

அமர் சேவா சங்கம்

2006-ல் தான் எனக்கு தென்காசி ஆய்க்குடி அமர் சேவா சங்கம் பற்றி தெரிந்தது. அதோட நிறுவனர் ராமகிருஷ்ணன் ஒரு விபத்தில் கழுத்துக்குக் கீழே செயல்படாமல் முடங்கிப்போன நிலையிலும், பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். அங்கே சென்று 14 மாதங்கள் தங்கி இருந்தேன்.

பெரியார் பற்றாளர்

அந்த ஆசிரமத்தில் ஆங்கிலம், கணினி பயிற்சி போன்றவற்றை கற்றுக்கொடுத்தனர். எனக்கு தன்னம்பிக்கை வந்தது. வெளியில் வந்தேன். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகம், தோவாளை தாலுகா அலுவலகம்ன்னு பல இடங்களிலும் மக்களுக்கு மனு எழுதிக் கொடுத்தேன். அதில் ஒரு சிறிய தொகை கிடைத்தது.

தொடர்ந்து சொந்தமா ஆட்டோ எடுத்து, அதை என்னோட தேவைக்காக ஓட்டக் கற்றுக் கொண்டேன். எங்க ஊர்ல இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இறச்ச குளத்தில் இந்தியன் அங்காடின்னு செல்போன் ரீசார்ஜ், பஸ், ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் கடை வைத்துள்ளேன். ஆட்டோவில் தான் தினமும் கடைக்குச் செல் கிறேன். கடையிலேயே ஒரு கட்டில் போட்டுள்ளேன். வலிக்கும்போது படுத்துக்கொள்வேன். என் மருந்து தேவைக்கும், சாப்பாட்டுக்கும் வருமானம் கிடைக்குது. எனக்கு ஜாதி, மதங்களில் நம்பிக்கை கிடையாது. பெரியார் பற்றாளர். அதனால் கருப்பு ஆடைதான் எப்பவும்.

தன்னம்பிக்கை

அரசு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்ததில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட் டத்தில் என்னைப்போல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 26 பேர் உள்ளனர். அவர்களில் பலருக்கு சக்கர நாற்காலி வாங்கக்கூட வசதி இல்லை. அதைச் செய்தாலே போதும். இப்போ என்னைப்போல் பாதிக்கப்பட்டோராலும் வாழ முடியும்ன்னு ஒவ்வொருவரையும் தேடிப்போய் தன்னம்பிக்கை கொடுத்துட்டு இருக்கேன்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x