Published : 05 Dec 2016 10:50 AM
Last Updated : 05 Dec 2016 10:50 AM

முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்: ராமதாஸ்

ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்துக்குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவம் பெற்று வந்தார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் அளித்த மருத்துவத்தால் ஜெயலலிதா உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்பின் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவமனையின் நிறுவனர் அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

லண்டன் மருத்துவர் பேலின் வழிகாட்டுதலில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சையின் உதவியால் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து ஆதாரமற்ற செய்திகளை பரப்புதல், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட செய்திகளை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க உதவ வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x