Published : 26 May 2016 10:07 AM
Last Updated : 26 May 2016 10:07 AM

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 232 தொகுதிகளில் 134-ல் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தமிழகத்தின் 20-வது முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா கடந்த 23-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து தங்கள் அலுவலகங்களில் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், 23-ம் தேதி இரவு, மேலும் 4 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், செல்லூர் கே.ராஜூ மற்றும் துரைக்கண்ணு ஆகிய 4 அமைச்சர்களிடம் கூடுதலாக அளிக்கப்பட்ட துறைகள் பிரிக்கப்பட்டு புதிதாக அறிவிக்கப்பட்ட நால்வருக்கும் வழங்கப்பட்டன. இதன்படி, காதி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை - ஜி.பாஸ்கரன், இந்து சமய அற நிலையத்துறை - சேவூர் எஸ்.ராமச் சந்திரன், தொழிலாளர் நலத்துறை - நிலோபர் கபீல், கால்நடை பராமரிப்பு - பி.பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டது.

நேற்று காலை, சட்டப்பேரவை யில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். அப்போது புதிதாக அமைச்சர்களாக அறிவிக்கப் பட்டவர்களும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

நேற்று இரவு புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்களுடன் சேர்த்து, தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x